டெல்லி:250 வார்டுகளைக் கொண்ட டெல்லி மாநகராட்சிக்கு கடந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் 134 வார்டுகளை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி, 15 ஆண்டுகளாக ராஜ்ஜியம் செய்து வந்த பா.ஜ.க.வை வெளியேற்றி நீண்ட நாட்களுக்குப் பின் டெல்லி மாநகராட்சியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
இந்நிலையில், டெல்லி மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. முன்னதாக மாநகராட்சியின் தற்காலிக சபாநாயகராக பா.ஜ.க.வின் சத்ய சர்மா நியமிக்கப்பட்ட விவகாரம் மற்றும் நியமன கவுன்சிலர்கள் நியமிக்கப்பட்டதில் ஆளுநர் சக்சேனா மற்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இடையே மோதல் போக்கு நிலவுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், டெல்லி மாநகராட்சி தேர்தலுக்குப் பின் நடைபெற்ற முதல் கூட்டத்தில் மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான ரகசியத் தேர்தலை நடத்தாமல் நியமன உறுப்பினர்களை பதவிப் பிரமாணம் செய்துகொள்ள தற்காலிக சபாநாயகர் சத்ய சர்மா அழைத்துள்ளார்.