மேற்கு வங்கம் கூச் பெஹார் மாவட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், கூச் பெஹார் நகராட்சித் தலைவருமான ரவீந்திரநாத் கோஷ், பிரியாணியில் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருள்களால் ஆண்மைக் குறைவு ஏற்படுவதாகக் கூறி அப்பகுதியில் பிரியாணி கடையை மூடியுள்ளார்.
இது குறித்து ரவீந்திரநாத் கோஷ் கூறுகையில், “இதற்குப் பின்னணியில் மருத்துவ ஆதாரம் இல்லை என்றாலும், பல்வேறு தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே நாங்கள் அதை மூடிவிட்டோம். கூச் பெஹார் நகராட்சியில் சட்டவிரோதமாக இயங்கிய பல கடைகள் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. குறிப்பாக ‘கொல்கத்தா பிரியாணி கடை’ மீது ஆண்மைக் குறைவு ஏற்படுத்தும் சில பொருள்களைப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு உள்ளது. எனவே, நாங்கள் வந்து கடையை மூடிவிட்டோம்” என்றார்.
மேலும் கோஷ் கூறுகையில், “இந்தக் கடை மட்டுமல்ல, இன்னும் பலர் சாலைகளை ஆக்கிரமித்து வருகின்றனர். சாலைகளில் சமைக்கிறார்கள். அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை - பீகார் மற்றும் உத்தரப்பிரதேசமாக இருக்கலாம். இந்த கடைகள் நள்ளிரவு வரை திறந்திருக்கும் மற்றும் அனைத்து வகையான சமூக விரோத செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.
இங்கு மக்கள் குடித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றனர். அவர்களுக்கு எந்த வர்த்தக உரிமமும் இல்லை மற்றும் சில காலம் மட்டுமே வியாபாரம் செய்கின்றனர். இவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் எங்களிடம் இல்லை. இந்த நபர்கள் யார், அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதைக் கண்டறிய நாங்கள் காவல் துறையினருக்குத் தெரிவித்துள்ளோம் ” என கோஷ் தெரிவித்துள்ளார்.