கோபால்கஞ்ச் : பீகாரில் நண்பர்களுடனான பந்தயத்தில் ஒரே நேரத்தில் 150 மோமோஸ்களை (momos) சாப்பிட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம் சிஹோர்வா கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான இளைஞர் விபின் குமார். சிவான் மாவட்டத்தில் உள்ள பதாரியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மொபைல் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், சிவான் மாவட்டம் கோபால்கஞ்ச் அருகே சாலையில் விபின் குமார் சடலமாக கிடந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், விபின் குமாரின் சடலத்தை மீட்டு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதித்து தொடர்ந்து அவரது பெற்றோரிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது மகன் விபினுக்கு விஷம் கொடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அவரது தந்தை விஷ்னு மஞ்சி தெரிவித்து உள்ளார்.
இது குறித்து பேசிய அவர், சம்பவத்தன்று கடையில் இருந்த தனது மகனை இரண்டு இளைஞர்கள் அழைத்துச் சென்றதாகவும், அதன் பின் அவர் திரும்பி வரவில்லை என்று தெரிவித்து உள்ளார். சாலையோரம் கிடந்த தனது மகனின் சடலத்தை சிலர் பார்த்தது தகவல் தெரிவித்ததாகவும், தான் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த நிலையில், போலீசார் அதை ஏற்க மறுத்ததாகவும் அவர் கூறி உள்ளார்.
விபின் குமாரின் சடலம் கிடந்த இடம் தங்களது காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது அல்ல என்றும் தாவே போலீசாருக்கு தகவல் அளிக்குமாறு காவல் அலட்சியமாக பதிலளித்ததாக விஷ்னு தெரிவித்து உள்ளார். அதேநேரம், இந்த சம்பவம் குறித்து பேசிய போலீசார், நண்பர்களுடனான பந்தயத்தில் 150 மோமோஸ்களை சாப்பிட்டதால் விபின் குமார் இறந்ததாக தெரிவித்து உள்ளனர்.
அளவுக்கு அதிகமாக மோமோஸ்களை சாப்பிட்ட நிலையில், விபின் குமாரின் உடல் நலம் மோசமானதாகவும், சர்தார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி விபின் குமார் உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர். இருப்பினர் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியீட்டுக்கு பின்னரே விபின் குமார் இறப்புக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க :மோடி அவதூறு வழக்கு: குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ராகுல் மேல்முறையீடு!