பாட்னா: பிகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் இந்து மதத்தை சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட இஸ்லாமிய பெண்ணுக்கு அவரது குடும்பத்தார் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பாகல்பூரை சேர்ந்த ராம் குமார், முஸ்கன் கட்டூன் இருவரும் ஒரு வருடமாக காதலித்துவந்தனர். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் முஸ்கன் கட்டூன் அக்டோபர் 18ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறி ராம் குமார் வீட்டிற்கு சென்றார்.
அங்கு ராம் குமாரின் பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்துக்கு பின்பும் முஸ்கன் கட்டூன் குடும்பத்தார் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்துவந்துள்ளனர். இதனால் ராம் குமார், முஸ்கன் கட்டூன் இன்று (நவம்பர் 23) பாகல்பூர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.