விவசாயிகள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு - போலீஸ் வாகனத்திற்கு தீ வைப்பு! பீகார்:பக்ஸர் மாவட்டம், சவுசா கிராமத்தில் உள்ள அனல் மின் உற்பத்தி நிலையத்திற்கு கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரி, விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அதிக இழப்பீடு கோரி நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயின் வீட்டிற்குள் போலீசார் நுழைந்து, அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த செய்தி கிராம மக்களிடையே பரவிய நிலையில், கொந்தளித்த விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்ட நிலையில், போராட்ட களத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அரசு மற்றும் போலீசாரின் வாகனங்களை பொது மக்கள் அடித்து நொறுக்கினர். மேலும் காவலர்களின் வாகனத்திற்கு தீ வைத்ததால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள், விவசாயிகளை கலைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். இதுகுறித்து பக்ஸர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணீஷ் குமார் கூறுகையில், அரசு மற்றும் காவல் துறை வாகனங்களைத் தொடர்ந்து அனல் மின் உற்பத்தி நிலையத்தையும் விவசாயிகள் அடித்து நொறுக்கியதாக தெரிவித்தார்.
மேலும் வானத்தை நோக்கி 6 ரவுண்ட்கள் துப்பாக்கியால் சுட்டு போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டதாக அவர் கூறினார். கடந்த 2010-11ஆம் ஆண்டுகளில் அப்போதைய மதிப்பின் படி விவசாயிகளிடம் இருந்து நிலத்தை வாங்கிய அனல் மின் நிர்வாகம், கடந்த ஆண்டு மின் உற்பத்தி நிலையத்தை கட்டமைக்கும் பணியை தொடங்கியதாகவும், தற்போதையை மதிப்பின் படி தங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டதாகவும் கடந்த 2 மாதங்களாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருவதாக அதிகாரி தெரிவித்தார்.
இதையும் படிங்க:பனிமூட்டம் காரணமாக 26 ரயில்கள் தாமதம் - வடக்கு ரயில்வே அறிவிப்பு