பீகார்:நாட்டில் பல்வேறு மாநிலங்களால் முன்வைக்கப்படும் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருவது சாதிவாரியான கணக்கெடுப்பு தான். அந்த வகையில், பீகார் மாநிலத்தின் சாதிவாரியான கணக்கெடுப்பு, நாட்டின் விடுதலைக்குப் பின்னர் நடத்தப்படும் முதல் சாதி வாரியான கணக்கெடுப்பு என்பதனால் வரலாற்று ரீதியாக தனிச்சிறப்பைக் பெற்றுள்ளது. இதற்கு முன்பு 1931-ஆம் ஆண்டு, ஆங்கிலேயர் ஆட்சியின் போது, சாதி வாரியான கணக்கெடுப்பு இந்தியாவில் நடத்தப்பட்டது.
ஒவ்வொரு மாநிலத்திலும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, தொழில் திறன், இடஒதுக்கீடு போன்றவற்றைப் பெறுவதற்கு சாதி வாரியான கணக்கெடுப்புகள் கட்டாயமாக்கப்படுகின்றன. பீகார் மாநில அரசு, பல்வேறு இடையூறுகளை கடந்து, நாட்டிலேயே முதன்முறையாக சாதிவாரியான கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. அந்த வகையில், பீகார் சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்திருந்தார்.
சாதிவாரி கணக்கெடுப்புக்கான உரிமை மத்திய அரசுக்கே உண்டு என்றும், மாநில அரசுக்கு சாத்தியமற்றது என்றும், மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் தொகையை தவிர, மற்ற சாதிகளின் மக்கள்தொகையை கணக்கெடுக்க முடியாது என மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு தெளிவுபடுத்தியது. இதனால் பீகார் மாநில அரசின் முடிவுக்கு எதிராக மத்திய அரசு பீகார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதனால் நீதிமன்றத்தின் உத்தரவு வரும்வரை கணக்கெடுப்பு நிறுத்தப்பட்டது. இதற்கு சமூக நீதியை நிலைநாட்டவும், சாதி வாரியாக ஆய்வுகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது என பீகார் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. பின்னர், சாதி வாரி கணக்கெடுப்பிற்கு நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், மீண்டும் கணக்கெடுப்புக்கான பணியை இந்த ஆண்டு ஜனவரி மாதம் 7-ஆம் தேதியிலிருந்து அம்மாநில அரசு முழுவீச்சோடு தொடங்கி, ஆகஸ்ட் 16-ஆம் தேதி நிறைவு செய்தது. இந்நிலையில் சாதி வாரியான கணக்கெடுப்பின் முடிவுகளை அம்மாநில அரசு, காந்தி ஜெயந்தியான இன்று (அக்.02) வெளியிட்டுள்ளது.
அதன்படி, பீகார் மாநிலத்தின் மொத்த மக்கள்தொகை 13 கோடியே 7 லட்சத்து 25 ஆயிரத்து 310 என தெரியவந்துள்ளது. பீகார் அரசு, சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், "பீகார் மாநிலத்தில் மொத்தம் 13.07 கோடி மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் பொது பிரிவினர் (General category) 15.52 சதவிகிதம் பேரும், பிற்படுத்தப்பட்டோர் (Other Backward Caste-OBC) 27.13 சதவிகிதம் பேரும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (extremely backward class) 36.01 சதவிகிதம் பேரும் இருக்கின்றனர்.