பீகார்:பீகார் சட்டசபையில் குளிர்கால கூட்டுத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விரிவான அறிக்கையை ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும் அம்மாநில முதலமைச்சருமான நிதிஷ்குமார் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், பீகாரில் கருத்தரித்தல் விகிதம் 4.3 சதவிகிதத்தில் இருந்து 2.9 சதவிகிதமாக குறைந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், பீகாரில் மக்கள்தொகை கட்டுபாட்டிற்கு இளம்தலைமுறை பெண்களின் பாலியல் குறித்த விழிப்புணர்வு தான் காரணம் எனத் தெரிவித்தார். மேலும், அவர் கணவன் - மனைவி இடையேயான அந்தரங்கம் குறித்து சைகையுடன் பேசினார். சட்டசபையில் நிதிஷ்குமாரின் இத்தகைய பேச்சு பிற பெண் உறுப்பினர்களை முகம் சுழிக்க வைத்தது. மேலும், அவர்கள் நிதிஷ்குமாரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
சட்டசபையில் நிதிஷ்குமார் பேசியது சர்ச்சையான நிலையில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், “நிதிஷ்குமாரின் பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. மக்கள்தொகையை கட்டுப்படுத்துவது தொடர்பாகத் தான் அவர் விளக்க முயன்றார்” என விளக்கமளித்தார்.
இந்நிலையில், நிதிஷ்குமாரின் சர்ச்சை பேச்சுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த விவகாரம் குறித்து தேசிய மகளி ஆணையத்தின் X சமூக வலைத்தள பக்கத்தில், “சட்டசபையில் பெண்கள் கருவுறுதல் குறித்து நிதிஷ்குமார் பேசியது கண்டிக்கத்தக்கது. அவரது கருத்துகள் பிற்போக்குத்தனமானவை. புண்படுத்தக்கூடிய இந்த பேச்சுக்காக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் நாட்டு பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என பதிவிட்டிருந்தது.