கரோனா வைரஸால் மக்கள் வீடுகளில் முடங்கியிருந்தாலும், சூட்டெறிக்கும் வெயிலானது மக்களை வீடுகளில் வாட்டி வதைக்கிறது. குளிர்சாதன வசதி இல்லையென்றால் மக்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கு சிரமம் தான். அந்த வகையில், உத்தரப் பிரதேசத்தில் கான்பூர், லக்னோ பகுதிகளில் செயல்படும் வனவிலங்கு பூங்காக்களில் வசிக்கும் விலங்குகளை வெயிலிலிருந்து காப்பாற்றும் முயற்சியில் காப்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
இது குறித்து கான்பூர் வனவிலங்கு காப்பாளர் திலீப் குப்தா கூறுகையில், "பகல் நேரத்தில் வெப்பம் அதிகளவில் காணப்படுகிறது. வெப்ப அலைகளிலிருந்து விலங்குகளைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். 'கார்னிவோர்ஸ்' (carnivores) வகைகளுக்கு ஏர் கூலர் வசதியும், பறவைகளுக்கு வைக்கோல் திரைச்சீலைகள், ஹெர்பிவோர்ஸ் (herbivores) வகைகளுக்கு மழை துளிகள் பாய்வது போன்ற அமைப்புகளை உருவாக்கியுள்ளோம்" எனத் தெரிவித்தார்.