ஆந்திர மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. இதைத் தொடர்ந்து முதலமைச்சராக பதவியேற்ற ஜெகன்மோகன் ரெட்டி ஆரம்பம் முதலே அதிரடி முடிவுகளை எடுத்துவந்தார்.
இது தவிர விவசாயிகள், பொதுமக்களுக்கான பல நல்ல திட்டங்களையும் அறிவித்தார் ஜெகன்மோகன் ரெட்டி. எனினும் அவர் மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகின்றன.
இதனிடையே, ஆந்திர மாநிலத்தில் உள்ள பள்ளிகளின் கட்டடங்களில் ஒய்.எஸ்.ஆர். கட்சி தங்களின் கட்சிக் கொடியின் வண்ணத்தை தீட்டுவதாக அம்மாநில பாஜக தலைவர்களுள் ஒருவரான லங்கா தினகர் புதிய குற்றச்சாட்டை வைத்துள்ளார். மேலும் மந்தல் பரிஷத் பள்ளிகளை நடத்துவதற்கு மத்திய அரசு சர்வா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கிறது. அந்த நிதியை ஜெகன்மோகன் ரெட்டியின் அரசு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை விளம்பரப்படுத்த பயன்படுத்துகிறது.
மேலும் மத்திய அரசு அளிக்கும் நிதியைப் பயன்படுத்தி கிராமப்புறங்களில் அமைந்துள்ள பள்ளிகளின் கட்டமைப்பையும் கல்வியின் தரத்தையும் உயர்த்துமாறும் அவர் ஆந்திர அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். முன்னதாக ஆந்திர மாநிலத்தில் பல்வேறு கிராமங்களிலும் உள்ள பஞ்சாயத்து அலுவலக கட்டடங்கிலும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் கொடியின் வண்ணம் பூசப்பட்டதற்கும் பாஜக எதிர்ப்பு தெரிவித்ததாக நினைவுகூர்ந்தார்.
முன்னதாக நேற்று முன்தினம் முதலமைச்சரின் திட்டத்திற்கு ஆட்டோ ஓட்டுநர்கள் நன்றி தெரிவிப்பது போன்ற ஸ்டிக்கர்களை ஆட்டோக்களில் போக்குவரத்துக் காவல் துறையினர் ஒட்டினர். ஆந்திர அரசின் இந்தச் செயலுக்கும் அவர் தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
ஆந்திர அரசு அலுவலர்களை இவ்வாறு கட்சியின் நலனுக்காக ஸ்டிக்கர் ஒட்டவைக்கிறது என குற்றஞ்சாட்டிய லங்கா தினகர், போக்குவரத்துக் காவலர்கள் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த உள்ளார்களா அல்லது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் போஸ்டர்களை ஒட்ட இருக்கிறார்களா? என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார்.
ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் போக்குவரத்துக் காவலர்கள் ஆந்திர முதலமைச்சர் பல நல்ல திட்டங்களை அறிமுகம் செய்தாலும் பொதுமக்கள் முகம் சுழிக்கும் வகையில் கட்சியை பிரபலப்படுத்த இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது முறையானது அல்ல என்றே சமூக பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.