நவீன யுகத்தில் காகிதத்தில் எழுதுவதற்கு பதிலாக மொபைல், லேப்டாப் என ஹைடெக் சாதனங்களுக்கு பெரும்பாலானோர் மாறிவிட்டனர். இந்தக் காலத்தில் ஆம்பிடெக்ஸ்ட்ரஸ் (Ambidextrous) எனப்படும் இரண்டு கைகளையும் பயன்படுத்தும் முறையில் எழுதி கர்நாடக இளைஞர் ஒருவர் காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறார்.
கர்நாடக மாநிலம், ரைச்சூரில் உள்ள குத்தேபல்லூரைச் சேர்ந்த இளைஞர் பசவ்ராஜ், ஆம்பிடெக்ஸ்ட்ரஸ் எனும் முறையில் வித்தியாசமான பாணியில் முயன்று சாதனைப் படைத்துள்ளார். இவர் தனது இரு கைகளாலும் ஒரே நேரத்தில் எழுதுவது மட்டுமின்றி, எழுத்துக்களை தலைகீழாக எழுதுகிறார்.
கர்நாடகா-தெலங்கானா எல்லையில் வசிக்கும் பசவ்ராஜ், சக்திநகரில் அமைந்துள்ள ஆர்டிபிஎஸில் பணிபுரிகிறார். இவருக்கு சிறு வயது முதலே புதுமையாக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்து வந்துள்ளது. இதற்காக பல முறை யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான், ஆம்புலன்ஸ்களில் ஆங்கில (ECNALUBMA) எழுத்துகள் தலைகீழாக எழுதப்படுவதை பசவ் கவனித்துள்ளார். ஒரே நேரத்தில் இரண்டு கைகளால், அதுவும் தலைகீழாக எழுதினால் நிச்சயம் அது தனித்துவமாகத்தானே இருக்கும் என்ற எண்ணம் பசவ்ராஜுக்குள் துளிர்விட்டது.