தங்களது மாநிலத்தில் பணிபுரியும் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது வீடுகளுக்குச் செல்ல சிறப்பு ரயிலை இயக்க மத்திய அரசிடம் வலியுறுத்துமாறு மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், "இந்தூர் நகரம் தொழில்கள், வணிகங்கள், கல்வி நடவடிக்கைகளுக்கான முக்கிய மையமாகத் திகழ்கிறது. மேற்கு வங்கத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து குடிபெயர்ந்த தொழிலாளர்கள் இந்தூரில் பணிபுரிகிறார்கள்.
ஊரடங்கினால் அவர்கள் தங்களது ஊர்களுக்குச் செல்ல விரும்புகிறார்கள். ஆனால், நீண்ட தூரம் பயணத்திற்கான முறையான போக்குவரத்து இல்லாததால் தனியார் வாகனங்களில் சொந்த மாநிலங்களுக்கு ஆபத்தான முறையில் பயணம் செய்கிறார்கள்.
எனவே, இந்தூரிலிருந்து வீடு திரும்ப விரும்பும் மேற்கு வங்க குடிபெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காக இந்தூர்-கொல்கத்தா இடையே சிறப்பு ரயிலை இயக்க வலியுறுத்தி ரயில்வே அமைச்சகத்துக்கு கடிதம் எழுதுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:'சொந்த ஊருக்குப் போயே ஆகணும்' - உரிய அனுமதியின்றி உ.பி. எல்லையில் கூடிய இடம்பெயர் தொழிலாளர்கள்!