தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சுனாமி ஆழிப்பேரலை தாக்குதலிலிருந்து தப்பிப்பது எப்படி? - சுனாமி பெயர்க்காரணம்

தமிழ்நாட்டு மக்களால் 2004 டிசம்பர் 26ஆம் தேதியை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா? சுனாமி தாக்குதல் நடந்து ஆண்டுகள் 14 கடந்துவிட்டாலும், அது ஏற்படுத்திய தாக்கம் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. அதன் ஆங்காரமான சப்தம் காதோரம் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

World Tsunami Awareness Day 5 Nov

By

Published : Nov 5, 2019, 12:02 AM IST

ஆழிப்பேரலையில் சிக்கி கடலுக்குள் மரணித்த அந்த மக்களின் மரண ஓலத்தின் சப்தம், ஒருகணம் நம் உயிரை நிறுத்திவிடும். இதுபோன்ற ஆபத்தான இயற்கை பேரழிவிலிருந்து தப்பித்துக்கொள்வது எப்படி? 'யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே' என்பது போல் சுனாமியை முன்கூட்டியே நம்மால் அறிந்துகொள்ள இயலுமா? என்பன போன்ற பல கேள்விகளை உள்ளடக்கிய இந்த செய்தித் தொகுப்பை காணலாம்.

சுனாமி விழிப்புணர்வு தினம்

சுனாமி குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 5ஆம் தேதி சுனாமி விழிப்புணர்வு தினமாக (World Tsunami Awareness Day) கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் முதல் சுனாமி விழிப்புணர்வு தினம், 2016ஆம் ஆண்டுதான் நடைமுறைக்கே வந்தது. சுனாமி தாக்குதலால் மக்கள் பாதிப்படைவதை குறைக்க வேண்டும் என்பதே இதன் பரவலான நோக்கம்.

இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருள் கடைப்பிடிக்கப்படும். அந்த வகையில் 2017ஆம் ஆண்டு சுனாமியால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்தல், 2018ஆம் ஆண்டு சுனாமி குறித்த எச்சரிக்கை, சமிக்ஞை என்ற கருப்பொருளில் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த ஆண்டு (2019) பாதிப்புகளைக் குறைத்தல், கட்டமைப்பு, அடிப்படை சேவைகளில் (sendai sevan campaign) கவனம் செலுத்தப்படவுள்ளது.

தாக்குதல்

சுனாமி என்பது ஜப்பானிய வார்த்தை. ஜப்பான் மொழியில் சு (Tsu) என்றால் துறைமுகம் (Harbour). நாமி (nami) என்றால் அலையை (wave) குறிக்கும். சுனாமி பேரழிவு அரிதான ஒன்றாக இருந்தாலும் இதன் தாக்கம் மிகக் கொடுமையானது. கடந்த 100 ஆண்டுகளில் நடந்த 58 சுனாமி தாக்குதல்களில் இதுவரை இரண்டு லட்சத்து 60 ஆயிரம் பேர் தங்களின் உயிரை இழந்துள்ளனர்.

2004ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் நிகழ்ந்த சுனாமி தாக்குதலே சமீபத்திய அதிக உயிரை காவுவாங்கிய இயற்கை பேரழிவாகும். அப்போது நிகழ்ந்த ஆழிப்பேரலையில் சிக்கி இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட 11 நாடுகளைச் சேர்ந்த இரண்டு லட்சத்து 27 ஆயிரம் பேர் பலியானார்கள்.

காரணம்

பொதுவாக சுனாமி ஏற்பட நான்கு முக்கியக் காரணிகள் உள்ளன. அவைகள்:

  1. நிலநடுக்கம்,
  2. நிலச்சரிவு,
  3. எரிமலை வெடிப்பு,
  4. கிரகங்களுக்கு இடையேயான மோதல் - extraterrestrial collision (சூரியனைச் சுற்றி வரும் குறுங்கோள் (asteroid), விண்கற்கள் (meteors) ஆகியவை ஆகும்).

1. நிலநடுக்கம்

கடற்கரை பகுதிகள், கடலுக்கு அடியில் பெரிதளவில் நிலநடுக்கம் ஏற்படும்போதும் சுனாமி ஆழிப்பேரலைகள் எழுகின்றன.
இந்த நிலநடுக்கங்கள் ரிக்டா் அளவுக்கோலில் 6.5ஐ தாண்டும்போது ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

நிலநடுக்கத்தின் காரணமாக கடலுக்கு அடியில் பாறைகள் நகர்வுகளாலும் சுனாமி ஏற்படுகிறது. கடலுக்குள் செங்குத்தான நிலையில் நிலநடுக்கம் ஏற்படும்போதும் சுனாமி தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது.

2. நிலச்சரிவு

அதேபோல், நிலச்சரிவு ஏற்பட்டு கடலுக்குள் அதிகப்படியான தண்ணீர் செல்லும்போதும் சுனாமி அலைகள் எழும்பும்.

3. எரிமலை

கடலுக்கு அடியில் அல்லது கடலுக்குள் உள்ள பெரிய எரிமலைகள் வெடித்துச் சிதறும்போதும் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளது. 1883 ஆகஸ்ட் 26ஆம் தேதி இந்தோனேசியாவில் உள்ள கிரகட்டோவா (krakatoa) என்னும் எரிமலை வெடித்துச் சிதறியது. இதன் காரணமாக 135 அடி உயரத்துக்கு கடல் அலைகள் எழுந்துவந்து தாக்கின. இந்த சுனாமி தாக்குதலுக்கு 36 ஆயிரத்து 417 பேர் பலியானார்கள்.

4. கிரகங்களுக்கு இடையேயான மோதல்

அடுத்ததாக கிரகங்களுக்கு இடையேயான மோதல். இது மிகவும் அரிதான ஒரு நிகழ்வாகும். சமீபத்திய காலங்களில் இதுபோன்ற சுனாமி தாக்குதல்கள் நடைபெறவில்லை. வானில் நடக்கும் தாக்குதல்களால், கடல் அலைகள் எழும்ப வாய்ப்புள்ளதா? என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு நடத்திவருகின்றனர். பொதுவாக இதெல்லாம் சுனாமி ஏற்படுவதற்கான சமிக்ஞைகள்.

சமிக்ஞை
சுனாமி ஏற்படும் முன்னதாக கடலுக்குள்ளிருந்து ஒருவித பயங்கரமான சப்தம் (உறுமல் போன்ற இரைச்சல் ஒலி) கேட்கும். அந்த சப்தம் விமானம் அல்லது ஏவுகணைகள் பறப்பதுபோல்கூட இருக்கும். இதை நீங்கள் உணர்ந்தால் சற்றும் தாமதிக்க வேண்டாம். எவ்வித உத்தரவுக்கும் காத்திருக்க வேண்டாம். அங்கிருந்து பாதுகாப்பான பகுதிக்கு உடனடியாக நகர்ந்துவிடுங்கள். அதாவது தாழ்வான பகுதியில் நிற்க வேண்டாம். உயர்வான பகுதிக்குச் சென்றுவிடுங்கள்.

சுனாமி நேரங்களில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று அரசுத் தரப்பில் சில எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. வானுயர்ந்த கட்டடங்கள், பெரிய கனரக இயந்திரங்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள் உங்களை சுனாமி தாக்குதலிலிருந்து முழுவதுமாகக் காப்பாற்றாது. ஆனால் தாக்குதலின் வீரியத்தைக் குறைக்கலாம், தற்காலிக பாதுகாப்பு அளிக்கலாம். ஜப்பானில் 2011ஆம் ஆண்டு நடந்த சுனாமி தாக்குதலில் கட்டடத்தில் பாதுகாப்பாக இருந்த பலர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதனால் உயிர் இழப்பு அதிகரித்தது.

700 மில்லியன் மக்கள்

2004ஆம் ஆண்டு சுனாமி தாக்குதலுக்குப் பின்னர்தான், அதுகுறித்த விழிப்புணர்வு இந்தியாவுக்கு தெரியவந்தது. சுனாமி தாக்குதலை முன்கூட்டியே கண்டறியும் கருவி கண்டுபிடிப்பது குறித்தும் பேசப்பட்டது. உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக சுனாமி குறித்து ஆய்வு செய்யும் பல்கலைக்கழகங்கள் ஜப்பானில் அதிகம் உள்ளன. ரஷ்யா, இந்தியா, இத்தாலி ஆகிய நாடுகளில் இது குறித்த படிப்புகள் தற்போது காணப்படுகின்றன.

சுனாமி ஒருமுறை தாக்குதலோடு நிறுத்தாது. அடுத்த ஐந்து அல்லது 60 நிமிடங்களில் (ஒரு மணி நேரம்) அடுத்த தாக்குதல் நடக்கலாம். உலகெங்கிலும் 700 மில்லியன் மக்கள் கடற்கரை பகுதிகளில் வசித்துவருகின்றனர். இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் அவசியம்.

இதையும் படிங்க: சுமத்ரா தீவில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details