ஜூன் 3ஆம் தேதியான நேற்று உலக சைக்கிள் தினம் கொண்டாடப்பட்டது. முதன் முதலில் 2018ஆம் ஆண்டு நியூயார்க்கில் உலக சைக்கிள் தினம் கொண்டாட்டத்தை ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை தொடங்கிவைத்தது.
அதன்படி சைக்கிளில் பயணம் செய்தால் அது சிறந்த சுற்றுச்சூழலுக்கான போக்குவரத்தைத் தாண்டியும் நமது உடலை ஆரோக்கியத்தோடு வைத்துக்கொள்ள உதவுகிறது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
தனித்தன்மையும் அதிக நாள் உழைக்கும் திறனும்கொண்ட சைக்கிளை கடந்த இருநூறு ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்திவருகிறார்கள்.
சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்த உதவுவதால் சைக்கிளைப் பெரியவர்முதல் சிறுவர்கள், இளைஞர்கள் என அனைவரும் பயன்படுத்தி உடலையும் மனதையும் உறுதிப்படுத்திக்கொண்டால் வருங்கால சமூகம் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு சிறப்புடன் வாழ்வார்கள்.
தினமும் உடற்பயிற்சி செய்வதினால் உடல் நல்ல ஆரோக்கியம் பெறும். அதனால் நடைபயணம் மேற்கொள்ளும் அனைவரும் சைக்கிளைப் பயன்படுத்தினால் இரட்டிப்பு நன்மைகளைப் பெறுவர்.
சைக்கிள் விலையும் மலிவாக இருப்பதால் யார் வேண்டுமானாலும் எளிதில் வாங்கி ஓட்டலாம். ஏழைமுதல் செல்வந்தர்கள்வரை இதைப் பயன்படுத்த முடியும். இதனால் மக்கள் மத்தியில் மட்டும் இல்லாமல் பருவநிலைக்கும் இது நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
சைக்கிள் தினம் முக்கியத்துவம்
சைக்கிள் ஓட்டுவதால் சாலையில் விபத்துகள் குறைந்து பாதசாரிகளின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும்.
அரசு, சைக்கிள் ஓட்டுவதின் நல்ல பயன்களைப் பொதுமக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். மேலும் அதனைத் திட்டங்களிலும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளும் நடத்தி மக்களுக்கு அதன் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறவேண்டிய அவசியம் இந்தக் கால சூழலில் இருக்கிறது.
சைக்கிளால் உடலில் ஏற்படும் நன்மைகள்:
- இதய நோய்கள் வராமல் தடுக்க உதவும்
- மன அழுத்தத்தை குறைக்க உதவும்
- நீரிழிவு நோய் வராமல் தடுக்கும்
- அதிக எடையைக் குறைக்க உதவும்
- இல்லற வாழ்க்கையில் நல்ல பலனை அளிக்கிறது.
2019ஆம் ஆண்டின் சைக்கிள் தினம்
கடந்தாண்டு இந்த நாளில் டெல்லியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தெருக்களில் காலையில் சைக்கிள்களை ஓட்டி மகிழ்ந்தனர். பெங்களூருவில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் நூறு பேர் சைக்கிள் ஓட்டினர். மேலும் இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் மக்கள் சைக்கிள்களை ஓட்டினர்.
கரோனா ஊரடங்கில்
- குடிபெயர் தொழிலாளரான 20 வயது மகேஷ் ஜனா என்பவர் மகாராஷ்டிராவிலிருந்து 1,700 கிலோமீட்டர் சைக்கிளில் பயணித்து தனது சொந்த ஊரான ஒடிசாவை அடைந்தார்.
- 15 வயதான ஜோதி குமாரி என்னும் சிறுமி குருகிராமிலிருந்து 1,200 கிலோ மீட்டர் தனது தந்தையை பின் இருக்கையில் அமரவைத்து சைக்கிளில் பயணித்து அவர் சொந்த ஊர் பிகாருக்குச் சென்றார். இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவாங்கா தனது ட்விட்டரில் ஜோதி குமாரியைப் பாராட்டி இருந்தார்.
- குடிபெயர் தொழிலாளியான சகீர் அன்சாரி (26) டெல்லியிருந்து சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் சைக்கிளில் பயணித்து பிகாரில் உள்ள சம்பரன் பகுதிக்குச் சென்றார்.
இதையும் படிங்க:நாளில் 1300 கி.மீ. சைக்கிள் பயணம்... தந்தையைச் சொந்த ஊர் அழைத்துச் சென்ற சிறுமி!