புதிய கரோனா (கோவிட்-19) வைரஸ் பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை அமைச்சக இணைச் செயலா் லவ் அகா்வால் கூறியதாவது:-
நாட்டில் புதிய கரோனா (கோவிட்-19) வைரஸ் பெருந்தொற்று பரவுவதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. இதையடுத்து வைரஸ் நோய்த்தொற்று பரவும் இடங்கள் உடனடியாக கண்டறியப்பட்டது. மக்கள் அனைவரும் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர்.
தனி நபர் தூய்மை உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டன. மேலும் கரோனா பாதிப்புகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மார்ச் 22ஆம் தேதி சோதனை ஓட்டமாக ஒருநாள் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.
அடுத்து வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் வகையில், 21 நாள்கள் பூட்டுதல் (லாக் டவுன்) அமல்படுத்தப்பட்டது. இந்தத் தடுப்பு நடவடிக்கையை அரசாங்கம் எடுக்காமல் இருந்திருந்தால் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் எட்டு லட்சத்து 20 ஆயிரம் பேரை வைரஸ் தாக்கியிருக்கும்.