கேரள மாநிலம், மாவெல்லிகெரே அடுத்த வள்ளிகுன்னம் காவல் நிலையத்தில் காவல் அலுவலராக பணியாற்றி வந்தவர் சவுமியா புஷ்பாகரன் (30). இவர் பணியை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர், வழிமறித்து திடீரென்று அவர் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் சவுமியா உடல் முழுவதும் தீப்பற்றி துடிதுடித்து அங்கேயே இறந்தார். பெண் காவல் அலுவலர் எரிக்கப்பட்ட இந்தச் சம்பவத்தில் தீ வைத்த அடையாளம் தெரியாத நபருக்கும் காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் தகவலறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த அந்த நபரை கைது செய்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல்துறையினர், தீவைத்த நபர் பெயர் அஜாஸ். போக்குவரத்து காவலராக பணிபுரியும் இவர், நான்கு வருடத்திற்கு முன்பு திருச்சூர் காவல்துறை அகாடமியில் பயிற்சியாளராக இருந்தபோது சவுமியா பயிற்சிக்கு சேர்ந்துள்ளார்.
அப்போது இருவருக்கு இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சவுமியா பயிற்சியை முடித்துவிட்டு வள்ளிக்குன்னம் காவல்நிலையத்தில் பணியில் சேர்ந்துள்ளார். அதன்பிறகும் இருவரது நட்பும் தொடர்ந்த நிலையில், கடந்த சில நாட்களாக அஜாஸ் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சவுமியாவை வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து வந்ததால் ஆத்திரமடைந்து சவுமியாவை தீ வைத்து கொளுத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார் என்றனர்.
அஜாஸ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், திருச்சூரில் சவுமியாவுடன் பயிற்சியில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.