ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
இதில் ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய இரு மாநிலங்களும் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது. லடாக் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும்.
ஜம்மு காஷ்மீரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு பயணம் மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து அமெரிக்கா- லத்தீன் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில் தற்போது மத்திய அமைச்சர்கள், உறுப்பினர்கள் 36 பேர், வரும் 18ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஜம்மு-காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.
இவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து இரு யூனியன் பிரதேசங்களிலும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் உள்ளிட்ட பல்வேறு நிலவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தின்போது அமைச்சர்கள் மக்களின் கருத்துக்களை கேட்டறிவதோடு, அரசின் இந்த முடிவின் மூலம் மக்களுக்கு கிடைக்க கூடிய பலன்கள் மற்றும் சலுகைகள் குறித்தும் எடுத்துரைப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி தனது ட்வீட்டர் பக்கத்தில், “ஜம்மு -காஷ்மீரின் துயர் துடைக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 36 பேர் செல்கின்றனர். அவர்கள் 18ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை அங்கு தங்கி மக்களை சந்திக்கவுள்ளனர். அங்கு மக்கள் சுதந்திரமாக உள்ளார்கள் என்றால் எதிர்க்கட்சிகளை முடக்குவது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: 16 நாட்டு தூதர்கள் காஷ்மீர் பயணம்!