இங்கிலாந்திடமிருந்து விடுதலை பெறும்போது, இந்தியா, பாகிஸ்தான் என்ற இரு நாடுகளாக நாடு பிரிக்கப்பட்டது. இந்தப் பிரிவினை ஏற்பட்டு 70 ஆண்டுகள் கடந்தாலும், அதனால் உண்டான குழப்பங்களும், சர்ச்சைகளும், கலவரங்களும் இன்றளவும் முடியாமல் நீண்டு கொண்டிருக்கின்றன. இக்குழப்பங்களுக்கு காரணமாக அமைவது ஜம்மு காஷ்மீர் எல்லைச் சிக்கலே!
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு காஷ்மீரை ஆண்டுவந்த மன்னர் ஹரி சிங் ஜம்மு & காஷ்மீரை சில நிபந்தனைகளுடன் இந்திய எல்லைக்குள் கட்டமைக்க சம்மதித்தார். எனவே மன்னர் ஹரிசிங்கின் நிபந்தனைகளை நிறைவேற்ற எண்ணிய இந்திய அரசு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தக்க திருத்தங்களை மேற்கொண்டு, சட்டப் பிரிவு 370-ஐ அறிமுகப்படுத்தியது.
1947ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் மன்னர் ஹரிசிங், பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆகியோர் இம்மாநிலத்திற்கான சிறப்புச் சலுகைகளை வரையறுத்தனர்.
சட்டப் பிரிவு 370இன் கீழ் வழங்கப்படும் சிறப்புச் சலுகைகள்
- ராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு துறைகள் தவிர, பிற துறைகள் தொடர்பாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இயற்றும் சட்டங்கள், இம்மாநிலத்தின் இசைவு இல்லாமல் இயற்றினால், அந்தச் சட்டங்கள் இம்மாநிலத்திற்கு பொருந்தாது.
- ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் பிற மாநிலத்தவர்கள் அசையா சொத்துகள் வாங்க முடியாது. ஆனால் இம்மாநில மக்கள் இந்தியாவின் பிற மாநிலங்களில் அசையா சொத்துகள் வாங்கலாம்.
- இம்மாநில பெண்கள் வெளிமாநில ஆண்களை திருமணம் செய்து கொண்டால், அப்பெண்கள் இம்மாநிலத்தில் அசையா சொத்து வாங்க முடியாது. ஆனால் ஆண்கள் வெளி மாநில பெண்களை திருமணம் செய்துகொண்டாலும், அவர்கள் இம்மாநிலத்தில் அசையா சொத்துகளை வாங்கலாம்.
- இந்திய அரசியல் சாசனத்தின் 238ஆவது பிரிவு இம்மாநிலத்திற்கு பொருந்தாது.
- இம்மாநிலத்தின் எல்லைகளைக் குறைக்கவோ அல்லது கூட்டவோ முடியாது.