கரோனா வைரஸ் நோய் இந்தியாவில் வேகமாக பரவிவருகிறது. நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் பொருளாதாரம் தேக்கநிலை அடைந்து பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்குவிப்பு திட்டத்தை பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். நிலம், தொழிலாளர், பணப்புழக்கம், சட்டம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படும் என மோடி தெரிவித்தார்.
சிறு தொழில், தொழிலாளி, விவசாயி, நடுத்தர வர்க்கத்தினர், குடிசை தொழில், வெளிமாநில தொழிலாளர்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அவர் கூறினார். திட்டம் குறித்த முழு விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுவார் என தெரிவித்தார்.
மக்கள் தொகையில் பொருளாதாரத்தில் கீழ் நிலையில் உள்ள 13 கோடி குடும்பங்களுக்கு பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம் என்ன கிடைக்க போகிறது என்பது ஆராயப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.