கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கால் வேலையிழந்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள் நடை பயணமாகவும் ரயில்கள் மூலமும் தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பினர்.
அப்படி உத்தரப் பிரதேசத்திற்கு திரும்பிய குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை அளிக்கும் நோக்கத்தில் "ஆத்மா நிர்பர் உத்தரப் பிரதேச ரோஜ்கர் அபியான்" என்ற திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
இத்திட்டத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வழியே தொடங்கி வைத்தார். அப்போது பேசிய மோடி, "நாம் அனைவரும் வாழ்வில் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளோம். பொது வாழ்க்கையிலும் நாங்கள் பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளோம். ஆனால், மொத்த உலகமும் ஒரே நேரத்தில் இப்டியொரு பிரச்னையை எதிர்கொள்ளும் என்று யாரும் நினைத்ததில்லை.
இதனால் எல்லோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயிலிருந்து நாம் எப்போது மீண்டுவருவோம் என்று நமக்கு தெரியாது. இந்தத் தொற்றுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும், ஒரு விஷயம் நமக்கு தெரியும். இரண்டு கெஜ தூரம் இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் முகக்கவசம் அணிவதும் கரோனா வைரசிலிருந்து நம்மை பாதுகாக்கும்" என்றார்.