தாய்மை என்ற சொல்லைக் கேட்கும்போதே நம் மனதிற்குள் நம்மை அறியாமலே ஒரு உணர்வு ஏற்படும். அந்த உணர்வு மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் உண்டு. அப்படி தாய்மை அடையும் ஒவ்வொரு உயிரினமும் தனது பிள்ளைகளை கண்ணும் கருத்துமாக கவனித்துவரும். தான் பெற்ற பிள்ளைகள் மீது காட்டுவதுதான் தாய்மைக்கான அன்பா? என்றால் இல்லவே இல்லை என்பதே உண்மை.
தன் பிள்ளை மட்டுமல்லாது மற்ற உயிரினங்களையும் நேசிக்கும் உண்மையான அன்பே தாய் குணத்துக்கான சரியான அடையாளம் எனலாம். அதனை பறைசாற்றும்விதமாக தெலங்கானா மாநிலத்தில் ஒரு ருசிகர நிகழ்வு நடந்துள்ளது.
நாய்க்குட்டிகளை காக்கும் கோழி தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம், நாகரம் கிராமத்தில் அகமய்யா என்பவர் வசித்துவருகிறார். அவருடையை பண்ணையில் கோழிகளை வளர்த்துவருகிறார். இந்நிலையில், அங்குள்ள ஒரு பெட்டைக் கோழி, பிறந்து சில நாட்களேயான நாய்க்குட்டிகளை தன் குஞ்சுகள் போல் அக்கறையுடன் கவனித்துவருகிறது.
குட்டிகளின் அருகிலேயே நிற்கும் கோழி இது குறித்து அகமய்யா கூறுகையில், 'இந்தக் கோழி ஒருமுறை 20 முட்டைகளை ஈட்டிருந்தது. ஆனால், அதை எடுத்துச் சென்றுவிட்டதால் அது மனதளவில் மிகவும் பாதிப்புக்குள்ளானது. இந்நிலையில், அந்தக் கோழியின் கூட்டிற்கு அருகில் ஒரு நாய் சில குட்டிகளை ஈன்றது.அதிலிருந்து கோழி அந்தக் குட்டிகளை தனது சிறகுகளின் மூலம் பாதுகாத்துவருகிறது' என தெரிவித்தார்.
நாய் தனது குட்டிகளுக்கு பாலுட்டும்போதும், கோழி அதன் அருகிலேயே நின்று, என்ன செய்கிறது என்று கவனமாகப் பார்க்குமாம். நாய் அருகில் இல்லாத நேரத்தில், இந்தக் கோழி நாய்க்குட்டிகளை தாய்மை உணர்வுடன் தனது சிறகுகளால் மூடி அரவணைத்து பாதுகாக்கிறது.
நாய்க்குட்டிகளுக்கு தாயாக மாறிய கோழி இந்த அரவணைப்பில் நாய்க்குட்டிகளும் இதமாக துாங்குகிறது.மேலும், நாய்க்குட்டிகளுக்கு அருகில் யாரேனும் வந்தால், அவர்களை தொடவிடாமல் கோழி விரட்டவும் செய்கிறது. மாற்று இனத்தின் மீதான தாய்மை அன்பு இதுதானோ! என அந்த நிகழ்வை பார்க்கும் அப்பகுதியினர் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.