சுதந்திர இந்தியாவின் ஏழாவது பிரதமராக பொறுப்பேற்று திறம்பட செயல்பட்ட இவரின் ஆட்சி நீடித்தது வெறும் 11 மாதங்கள் மட்டுமே. அந்த 11 மாதங்களில் இவர் சந்தித்த சவால்களும், அமல்படுத்திய திட்டங்களும்... பிரதமர் பொறுப்பிற்கு ஆசைப்படும் இன்றைய இளம் தலைவர்கள் பலருக்கும் பாடம்.
தையா மன்னர் பரம்பரையின் இளவரசராக பிறந்த ராஜா ஸ்ரீ விஸ்வநாத் பிரதாப் சிங், பின் நாட்களில் வி.பி. சிங் ஆனார். இளமைப் பருவம் முதலே ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்தில் அதிக ஆர்வம் கொண்டவராய் வளர்ந்த இவர், 1948ஆம் ஆண்டு அலகாபாத் பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதுவே இவரின் அரசியல் வாழ்க்கைக்கு தொடக்கமாக அமைந்தது.
அந்த காலக்கட்டத்தில் வட இந்தியாவின் அரசியல் ஆசானாக விளங்கிய ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சோசியலிச இயக்கம், வினோபாபாவின் காந்திய செயல்பாடுகள், லால்பகதூர் சாஸ்திரியின் நேர்மையான அரசியல் என வெவ்வேறு கருத்தியல்கள் கொண்ட மூன்றையும் இணைத்து தனக்கான அரசியல் பாதையை வகுத்தார் வி.பி. சிங். அந்த பாதை தான் சமூகநீதி.
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது உத்தரப் பிரதேசத்தின் முக்கிய அரசியல் பிரமுகராக தன்னை வளர்த்துக்கொண்ட இவர், அவரது மறைவுக்குப் பின்னர் அமைந்த ராஜீவ் ஆட்சியில் மத்திய நிதியமைச்சரானார். அப்போது தான் பெரும் தொழிலதிபர்களின் வரி ஏய்ப்பே இந்திய கஜானா காலியாவதற்கு காரணம் என்ற அடிப்படையை கண்டறிந்து ஆட்டத்தை ஆரம்பித்தார்.
ரெய்டுகள் பறந்தன, அமிதாப் பச்சன் அலறவிடப்பட்டார்... திருபாய் அம்பானியின் சொத்துகள் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன. பெரும் தொழிலதிபர்களும், முக்கிய பிரமுகர்களும் மிரண்டார்கள். எவர் எவரின் நன்கொடைகளால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இயங்கி வந்தனவோ அவர்களின் அழுத்தத்தால் ராஜீவ் நெளிந்தார். அரசியல் சிக்கல்களை சமாளிக்க முடியாமல், வி.பி . சிங்கிடம் இருந்த நிதியமைச்சர் பதவியைப் பறித்து வேறு துறையை வழங்கினார். ஆனால், அதையும் வி.பி. சிங் விடுவதாய் இல்லை. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே இருந்த மனக்கசப்புகள் வெடித்து, அமைச்சரவையில் இருந்து வி.பி. சிங் நீக்கப்பட்டார்.
அந்த ஆதங்கத்தோடு இவர் ஆரம்பித்த ஜன மோர்ச்சா கட்சி, பின் நாட்களில் ஜனதா கட்சி, லோக் தளம், சோசியலிச காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஜனதா தளமாக உருவெடுத்தது. காங்கிரஸின் வீழ்ச்சி ஆரம்பமானதும் கிட்டத்தட்ட அதே காலக்கட்டத்தில் தான்.
அப்போது, இந்தியா முழுவதும் இருந்த காங்கிரஸ் எதிர்ப்பு அலையை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்ததில் நிறைந்திருக்கிறது இவரின் அரசியல் ராஜதந்திரம். டெல்லியில் இருந்துகொண்டு மாநிலங்களைப் பார்க்கும் தேசியத் தலைவராக இல்லாமல், மாநிலங்களை கவனித்தார், மக்களை நேசித்தார். அதன் நீட்சியாகவே, திமுக, தெலுங்கு தேசம், அசாம் கண பரிஷத் உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து தேசிய முன்னணி உருவானது. இதில் சிறப்பு என்னவென்றால், இந்த கூட்டணியை அங்கீகரித்து, இவர்களுக்கான முதல் வெற்றியை பரிசளித்தவர்களாக தமிழர்கள் இருந்தார்கள். 1989ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வி.பி. சிங் பரப்புரை மேற்கொண்ட திமுக பெரும் வெற்றி பெற்றது. கருணாநிதி தமிழ்நாட்டின் முதலமைச்சரானார்.