ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.ஆர். வெங்கடாபுரம் என்ற கிராமத்தில் இயங்கிவந்த எல்.ஜி. பாலிமர்ஸ் தனியார் ரசாயனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட ஸ்டைரீன் விஷவாயுக் கசிவினால் ஒரு சிறுமி உள்பட 12 பேர் உயிரிழந்தும், 2000-க்கும் மேற்பட்டோர் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சி.பி.சி.பி.) தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்.ஜி.டி.) ஆகியவை எல்.ஜி. பாலிமர்ஸ் ரசாயனத் தொழிற்சாலையிடம் விளக்கம் கோரியுள்ளன.
இந்தப் பேரிடர் காரணமாக ஏற்பட்ட நாசங்களைக் கவனத்தில்கொண்டு முதல்கட்டமாக 50 கோடி ரூபாயை வைப்புத்தொகையாகச் செலுத்துமாறு எல்.ஜி. பாலிமர்ஸ் தொழிற்சாலைக்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை கிடைத்ததும், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆந்திர முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
விசாகப்பட்டினம் தனியார் ரசாயன ஆலையால் ஏற்பட்ட ஸ்டைரீன் விஷவாயு கசிவுப் பேரிடர் சூழ்நிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக, தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைமையகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், எல்.ஜி. பாலிமர்ஸ் ஆலையிலிருந்து சுமார் 13,000 டன் ஸ்டைரீனை தென் கொரியாவின் தலைநகர் சியோவில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமையகத்திற்கு அனுப்ப கப்பல் அமைச்சகத்தின் உதவியுடன் ஆந்திரப் பிரதேச அரசு சிறப்பு சரக்கு கப்பல்களை ஏற்பாடு செய்தது.