கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் இறுதி வாரம் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து உள்நாட்டு விமான சேவை கடந்த மே 25ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சர்வதேச விமான சேவைகள் இரு தரப்பு ஒப்பந்தத்தின் (bilateral air bubble) கீழ் படிப்படியாக அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த இரு தரப்பு ஒப்பந்தத்தின் (bilateral air bubble) கீழ் டெல்லிக்கும் பிரிட்டனுக்கும் இடையேயான விமானங்களை ஏர் விஸ்தாரா இயக்கும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இருதரப்பு ஒப்பந்தங்கள் (bilateral ‘air bubbles’) என்றால் என்ன?
இருதரப்பு ஒப்பந்தம் என்பது சர்வதேச விமானப் போக்குவரத்தை மீண்டும் இரு நாடுகளுக்கிடையே மேற்கொள்வதற்கான ஒப்பந்தமாகும். இரு நாடுக்களுக்கு இடையே அத்தியாவசியமற்ற விமானப் பயணங்களை இது அனுமதிக்கிறது.
இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விமானங்களை குறிப்பிட்ட காலத்திற்கு இயக்கலாம். ஆனால், அவ்வாறு இயக்கப்படும் விமானங்கள் வேறெந்த விமான நிலையத்திலும் தரையிறக்கப்படக் கூடாது.
அதாவது டெல்லிக்கும் வாஷிங்டன் நகருக்கும் இடையே ஒரு விமானம் இயக்கப்பட ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டால், அது டெல்லியில் இருந்து நேரடியாக வாஷிங்டனுக்கு மட்டுமே இயக்கப்பட வேண்டும், இடையில் எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட எந்தக் காரணங்களுக்காகவும் அவ்விமானம் எங்கும் தரை இறக்கப்படக் கூடாது.
பிரிட்டனுக்கு விமானங்களை இயக்கும் ஏர் விஸ்தாரா
இந்த ஒப்பந்தத்தின்கீழ் வாரத்தில் மூன்று நாள்களுக்கு டெல்லிக்கும் லண்டனுக்கும் இடையே விமானங்கள் இயக்கப்படவுள்ளன. டெல்லியில் இருந்து லண்டன் செல்ல எகானமி வகுப்பில் 29,912 ரூபாயும், ப்ரீமியம் எகானமி வகுப்பில் 44,449 ரூபாயும், பிஸ்னஸ் வகுப்பில் 77,373 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், விரைவில் பாரீஸ், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கும் சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் என்று ஏர் விஸ்தாரா அறிவித்துள்ளது.
இப்போது வரை அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், ஜெர்மனி, கத்தார் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுடன் இந்தியா இருதரப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. மேலும், ஆஸ்திரேலியா, ஜப்பான், ரஷ்யா, சிங்கப்பூர் உள்ளிட்ட 13 நாடுகளுடன் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஏர் இந்தியாவை தனி ஆளாகக் கையகப்படுத்தும் டாடா குழுமம்!