வங்கிக்கடனை திரும்பச் செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பியோடிய பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், 'முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மீது மட்டுமே வழக்கு உள்ள நிலையில், அந்த சொத்துகளை தவிர்த்து, மற்ற சொத்துகளை அமலாக்கத் துறை பறிமுதல் செய்ய தடைவிதிக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு ஜுலை 29ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
2016ஆம் ஆண்டு பாரத ஸ்டேட் வங்கி உள்பட பல்வேறு வங்கிகளில் வாங்கிய ரூ. 9000 கோடி கடனைத் திரும்பச் செலுத்தவில்லை எனக் கூறி விஜய் மல்லையாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தற்போது செயல்படாமலிருக்கும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கான நிலுவைத் தொகையினை திரும்பச் செலுத்துவதற்காக மல்லையா வங்கிகளில் கடனை வாங்கியிருந்ததாகவும், அந்தக் கடனை திரும்ப செலுத்தவில்லை எனவும் அவர் மீது வழக்கு உள்ளது.
இந்நிலையில், கடனைத் திரும்பச் செலுத்தாமல், மல்லையா 2016ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு தப்பி ஓடினார். அவர் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.
பாரத ஸ்டேட் வங்கி, மல்லையாவை இந்தியாவிற்கு நாடு கடத்தி, கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தது.
இந்நிலையில், அமலாக்கத் துறை தனது சொத்துகளை பறிமுதல் செய்தவற்கு தடைவிதிக்கக்கோரி விஜய் மல்லையா ஜூலை 11ஆம் தேதி மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.