கர்நாடகா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல் எழுந்துள்ளது. அம்மாநிலத்தின் துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
இதனால், ராஜஸ்தானில் அசோக் கெலாட்டின் ஆட்சி தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. மேலும், காங்கிரஸ் எம்எல்ஏக்களை வளைத்துப்போட பாஜக குதிரை பேரம் நடத்துவதாகவும் குற்றச்சாடுகள் எழுந்தன.
இந்நிலையில், தனக்கு நெருக்கமான சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தொடர்புகொண்டு முதலமைச்சர் அசோக் கெலாட்க்கு ஆதரவளிக்குமாறு பாஜகவைச் சேர்ந்த முன்னாள் ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே கேட்டுக்கொண்டதாக ராஜஸ்தானில் பாஜக கூட்டணியில் இருக்கும் ராஷ்டிரிய லோக்தாந்த்ரிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹனுமான் பெனிவாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து ஹனுமான் பெனிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், "மெஜாரிட்டியை இழந்துள்ள அசோக் கெலாட் அரசை ஆதரிக்குமாறு தனக்கு நெருக்கமான காங்கிரஸ் எம்எல்ஏக்களை வசுந்தரா ராஜே தனிப்பட்ட முறையில் அழைத்து பேசுகிறார்.
சிகார் மற்றும் நாகூரில் பகுசிகளில் இருக்கும் ஜாட் இன சட்டப்பேரவை உறுப்பினர்களை அழைத்து அவர் பேசுகிறார். மேலும், சச்சின் பைலட்டிடமிருந்து விலகி இருக்குமாறு அவர் கூறுகிறார். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது" என்று தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
மேலும், தனது ட்வீட்டில் பாஜக உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரையும் டேக் செய்துள்ளார்.
பாஜகவிலிருந்த ஹனுமான் பெனிவால், 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான் தேர்தலுக்கு முன்பு வசுந்தரா ராஜேவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியிலிருந்து விலகினார். தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு வசுந்தரா ராஜே இதுவரை எவ்வித விளக்கத்தையும் அளிக்கவில்லை. மேலும், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில், அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் பாஜக தலைவர்கள் நடத்திய 'குதிரை பேரம்' தொடர்பான ஆடியோ நேற்று வெளியானது. அதைத்தொடர்ந்து பன்வர் லால் சர்மா, விஸ்வேந்திர சிங் ஆகிய இரு சட்டப்பேரவை உறுப்பினர்களை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து காங்கிரஸ் சஸ்பெண்ட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தலித் தம்பதி தாக்குதல் வழக்கு: காவலர்கள் 6 பேர் பணியிடை நீக்கம்!