கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆப்ரிக்க-அமெரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் காவலர் ஒருவரால் கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து வெள்ளை நிறவெறிக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு நாட்டு மக்களும் கிளர்ந்து எழுந்துள்ளனர்.
இப்போராட்டத்தின்போது, அடிமைகளை வியாபாரம் செய்த நபர்கள்,மன்னர்கள் உள்ளிட்டோரின் சிலைகள் உடைக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸின் சிலையும் உடைக்கப்பட்டது.
இதனிடையை அமெரிக்காவிலுள்ள இந்திய தூதரகத்தின் வெளியே இருந்த காந்தி சிலை அவமதிக்கப்பட்டது. மேலும், ஐரோப்பிய மக்களவைக்கு வெளியேயுள்ள காந்தி சிலையும் போராட்டக்காரர்களால் அவமதிக்கப்பட்டது.
இது தனக்கு வருத்தமளிப்பதாகவும் அந்த செயலுக்கு தான் மன்னிப்பு கோருவதாகவும் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னித் ஜஸ்டர் கூறியிருந்தார்.
காந்தியின் சிலையை அவமதித்தவர்கள், மனிதகுலத்திற்கு காந்தி செய்த பங்களிப்பை அறியாதவர்கள் என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாம் பிட்ரோடா விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் காந்தி சிலை அவமதிக்கப்பட்டது. ஜனநாயகம், சமத்துவம் ஆகிய கருத்துகளுக்கு விழுந்த அடி. காந்தி சிலையை அவமதித்தவர்கள், அவர் மனித குலத்திற்கு ஆற்றிய பங்களிப்பு குறித்தும்,20ஆம் நூற்றாண்டில் காலனிய ஆதிக்கத்திற்கு எதிராக செயலாற்றியது குறித்தும் அறியாதவர்கள்.
காந்தியின் கருத்துகள் அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு முன் எப்போதையும்விட இப்போது பொருத்தமாக இருக்கும். நெல்சன் மண்டேலா, மார்டின் லூதர் கிங் உள்ளிட்ட தலைவர்களுக்கு காந்தி முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார்" என்றார்.