தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

‘ஆதலால் காதல் செய்வீர்’ - காதலும்; காதலர் தினமும்! - காதல்

உலகெங்கிலும் உள்ள அனைத்து உயிருள்ள ஜீவன்களுக்கும் பொதுவானதாக அமைந்திருக்கும் ‘காதல்’ என்கிற மந்திரச் சொல்லை கொண்டாடும் நாளாக ‘பிப்ரவரி 14’ திகழ்கிறது.

valentines day

By

Published : Feb 14, 2019, 11:14 AM IST

‘காதல்’ என்பது வெறும் வாய் சொல் என்பதை விட, அது ஒரு வாழ்வியல் என்பதே மெய். அந்த வாழ்வியலைக் கடக்காத மனிதர்களே இல்லை என கூறலாம். இல்லை, இல்லை... காதலே செய்திடாத சிலரும் இருக்கிறார்கள் என்கிறீர்களா? ஆம், காதல் செய்துவிடக்கூடாது என்பதில் அவர்களுக்கு காதல்.

இப்படி மனிதர்களின் வாழ்வோடு ஒன்றாக பிணையப்பட்டிருக்கும் காதலுக்கு ஜாதி, மதம் என எந்த எல்லைகளும் கிடையாது. அத்துனைக்கும் அப்பாற்பட்டதுதான் காதலாக இருக்க முடியும்.

தாய் தன் மகன் மீதும், மகன் தன் தாய் மீது செலுத்திடும் அன்பில், தந்தை தன் குடும்பத்தை நிலை நிறுத்திட சிந்துகின்ற வியர்வைத் துளிகளில், ‘தாத்தா’ தன் பேரக் குழந்தையை பார்த்து பெரியவர் வடிக்கும் கண்ணீரில், பிரசவத்திற்கு மனைவியை உள்ளே அனுப்பிவிட்டு வெளியில் காத்திருக்கும் கணவனின் இதயத் துடிப்பில், அழகிய குழந்தையை பெற்றெடுத்த பின்னர் தாயின் முகத்தில் வரும் புன்சிரிப்பில் என இந்த பூவுலகம் முழுவதும் காதல் நிறைந்திருக்கும் இடங்கள் எண்ணில் அடங்காதவை.

"காதலினால் மானுடர்க்கு கலவி யுண்டாம்
கலவியிலே மானுடர்க்கு கவலை தீரும்
காதலினால் மானுடர்க்கு கவிதை யுண்டாம்
கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே!" - எனவும் மகாகவியால் போற்றப்பட்டது காதல்.

“யாயும் ஞாயும் யாராகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே!” என்கிற குறுந்தொகை பாடலில் ஒளிந்திருக்கும் வாழ்வியலுக்கு ஈடிணையேதும் இருக்க முடியுமா என்ன?

இப்படி தமிழர்களின் வாழ்வோடு, அவர்தம் நாகரீகத்தோடு, பூமிப்பந்தில் எங்கெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்களோ? அங்கெல்லாம், அவர்தம் இதயமெல்லாம் நிறைந்திருக்கும் அன்பின் காதல், ஒருபுறம் மகிழ்ச்சியைத் தரும் புத்துணர்வாக இருப்பினும், இழந்த காதலும் பிரிந்த உள்ளங்களும் தாளாத துயருடன் தவிக்கத்தான் செய்கின்றன.

இருப்பினும், அவர்களுக்கு காதல் வலியாக இருப்பதில்லை, அதை சேர விடாமல் தடுத்த சமூகத்தின் மீதுதான் வருத்தமாக இருக்க முடியும்.

இப்படி பல சிறப்புகள் நிறைந்த காதலை போற்றும் விதமாகவும், காதலை நினைவு கூறும் விதமாகவே, பிப்ரவரி 14-ம் தேதியான இன்று உலக காதலர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. காதல் செய்திடுவோம், காதலைப் போற்றிடுவோம்! அனைவருக்கும் காதலர் தின நல்வாழ்த்துகள்!

ABOUT THE AUTHOR

...view details