உத்தரப்பிரதேச மாநிலம், அலிகார் மாவட்டத்தில், இளம் பெண் ஒருவர், தனது தாய் தன்னை இஸ்லாமியர் ஒருவரை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தி சித்திரவதை செய்து வருவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து அந்த பெண் தன்னுடைய புகாரில், “நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எனது பெற்றோர்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. அதனால் என் தாய் அவரது பெற்றோர் வீடு இருக்கும் அலிகார் மாவட்டத்திற்கு வந்தார். அவரை சமாதானப்படுத்தி அழைத்துச் செல்ல நான் இங்கே வந்தேன். ஆனால் என் தாய், வீடு திரும்புவதற்கு பதிலாக என்னை இங்கேயே தங்கி படிப்பைத் தொடரும்படி கேட்டுக்கொண்டதால் நான் இங்கு தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
பின்னர் சில நாட்கள் கழித்து, என் தாய் இங்கே இஸ்லாமியர் ஒருவரை விரும்பி திருமணம் செய்துகொண்டது எனக்குத் தெரிய வந்தது. தொடர்ந்து சில நாட்கள் சென்றதும், என் தாய், அவர் திருமணம் செய்துகொண்ட ஆணின் சகோதரரை திருமணம் செய்துகொள்ளும்படி என்னை கட்டாயப்படுத்தினார்.
நான் அதற்கு ஒப்புக்கொள்ளாத காரணத்தால் என் தாய், அவரது குடும்பத்தினர் அனைவரும் என்னை கடுமையாக சித்திரவதை செய்ததோடு, தனி அறையில் வைத்து பூட்டி வைத்து கொடுமைப்படுத்தினர்” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அப்பகுதியின் முன்னாள் மேயர் சகுந்தலா பாரதி பேசுகையில், ”இப்பெண்ணின் தாயார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வாசிம் கான் என்பவருடன் வாழத் தொடங்கினார். பின்னர் வாசிமின் சகோதரர் சாஹில் இந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இதன் காரணமாகவே இவர்கள் இணைந்து குடும்பமாக சித்திரவதை செய்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.