உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் நிழல் உலக தாதா விகாஸ் துபே. அங்கு மிகப்பெரிய ரவுடியாக வலம் வரும் இவர் மீது கொலை, கொள்ளை, கடத்தல், கொலை முயற்சி என 200க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், ஒரு அரசியல் பிரமுகரை கொலை செய்ய முயன்றதாக அண்மையில் அவர் மீது சவ்பேபூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அவரை கைது செய்வதற்காக 50 பேர் கொண்ட காவல்துறை குழுவினர் ஜூலை 2 ஆம் தேதி நள்ளிரவு அவர் பதுங்கியிருந்த கான்பூர் மாவட்டத்தின் சவுபேபூர் பகுதியில் உள்ள பிக்ரு கிராமத்திற்கு விரைந்துள்ளனர்.
இதையறிந்த தாதா விகாஸ் துபே, அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து தன்னை பிடிக்க வந்த காவல் துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில், சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் தேவேந்திர மிஷ்ரா உள்பட எட்டு காவல் அலுவலர்கள் உயிரிழந்தனர்.
இதனையடுத்து, அங்கு தங்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட காவல்துறையினரிடமிருந்த ஏ.கே.47 உள்ளிட்ட நவீன ஆயுதங்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து அந்த கும்பல் தப்பியோடியதாக அறிய முடிகிறது.
இந்தச் சம்பவம் இந்தியளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சூழலில், தலைமறைவாக உள்ள விகாஸ் துபே, அவரது கூட்டாளிகளைக் காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதனிடையே, தாதா விகாஸ் துபேயின் மைத்துனரை உத்தரப்பிரதேச சிறப்பு அதிரடிப் படை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஷாஹ்தோல் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் பிரதிமா மேத்யூ கூறுகையில், "விகாஸ் துபேயின் மைத்துனரான (துபேயின் மனைவியின் சகோதரர்) ராஜூ நிகாம் மற்றும் அவரது மகன் ஆதர்ஷ் ஆகிய இருவரை உத்தரப்பிரதேச சிறப்பு அதிரடிப் படையினர் தமது காவலில் எடுத்துள்ளனர்" என்று கூறினார்.
கைது செய்யப்பட்டுள்ள ராஜூ நிகாம் செய்தியாளர்களிடம் கூறுகையில்," நான் எனது குடும்பத்தினருடன் ஷாஹ்தோல் மாவட்டத்தின் புதார் நகரில் வசித்து வருகிறேன். கடந்த 15 ஆண்டுகளாக நான் விகாஸ் துபேவுடன் தொடர்பில் இல்லை. நானும், எனது ஒரே மகனும் போலியாக பதிவு செய்யப்பட்டு ஒரு புனைவு வழக்கில் இணைக்கப்பட்டுள்ளோம். நான் காவல்துறையினரால் என்கவுண்டரில் கொல்லப்படலாம்" என்றார்.
விகாஸ் துபே குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ. 2.5 லட்சம் சன்மானம் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விகாசின் புகைப்படம் அடங்கிய சுவரொட்டிகள் ஊனோ சுங்கச் சாவடியிலும், இந்தியா - நேபாளம் எல்லை அருகே உள்ள லகிம்பூரி மாவட்டத்திலும் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.