தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹத்ராஸ் விவகாரத்தில் சதிச் செயலா?

லக்னோ : ஹத்ராஸ் விவகாரத்தில் ஏதேனும் சதிச் செயல் உள்ளதா என்பது குறித்து ஆராய சிறப்பு அதிரடிப் படை அமைக்கப்பட்டுள்ளது.

ஹத்ராஸ்
ஹத்ராஸ்

By

Published : Oct 22, 2020, 3:43 PM IST

ஹத்ராஸ் விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதன் பின்னணியில் ஏதேனும் சதிச் செயல் உள்ளதா என்பது குறித்து ஆராயும் வகையில் சிறப்பு அதிரடிப் படை அமைக்கப்பட்டுள்ளது. ஹத்ராஸ் விவகாரத்தை முன்வைத்து சாதியக் கலவரத்தைத் தூண்டி உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசின் புகழைக் கெடுக்க சிலர் முயற்சிப்பதாக புலனாய்வு அமைப்பு தகவல் வெளியிட்டது.

இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணையை மேற்கொள்ள சிறப்பு அதிரடிப் படை அமைக்கப்பட்டுள்ளதாக உத்தரப் பிரதேச காவல்துறை இயக்குனர் ஹிதேஷ் சந்திர அவஸ்தி தெரிவித்துள்ளார். சட்ட விரோதமான போராட்டம், சமூக வலைதளங்கள் மூலம் வெறுப்புணர்வு பரப்புதல் என ஹத்ராஸ் வழக்கு தொடர்பாக இதுவரை மொத்தம் 19 முதல் தகவல் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இவற்றின் அடிப்படையில் ஏதேனும் சதிச் செயல் உள்ளதா என்பது குறித்து ஆராய சிறப்பு அதிரடிப் படை விசாரிக்கவுள்ளது. மேலும், கலவரத்தைத் தூண்ட வெளிநாட்டிலிருந்து நிதி அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு 50 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து தங்களுக்கு ஆதரவாகப் பேச சிலர் முயற்சித்ததாக முன்னதாக செய்தி வெளியான நிலையில், தற்போது இது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.

உத்தரப் பிரதேசம், ஹத்ராஸ் என்ற கிராமத்தில் 19 வயது மதிக்கத்தக்க பெண், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி உயிரிழந்தார்.

இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் காவல் துறையினரே தகனம் செய்ததைத் தொடர்ந்து, இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்தக் கொடூர செயலில் ஈடுபட்ட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், அப்பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், பாலியல் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள், பல்வேறு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மேற்கு வங்க அரசியலில் பின்னடைவை சந்திக்கும் பாஜக...!

ABOUT THE AUTHOR

...view details