உத்தரப் பிரதேச மாநிலம் அவுர்ரையா மாவட்டத்தில் உள்ள செம்பூர் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் உதவி ஆசிரியராக அனில் குமார் (35) என்பவர் பணியாற்றி வந்தார். இவரின் மனைவி நீரஜ். இந்த தம்பதியருக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் மனைவி நீரஜ் கணவரிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரின் தாயார் வீட்டிக்கு சென்று விட்டார். இதையடுத்து அவரை சமாதானம் செய்து அழைத்துவர ஆசிரியர் அனில் மாமியார் வீடு அமைந்திருக்கும் சுகபூர்வா கிராமத்திற்கு சென்றார்.
அங்கு மனைவியை சமாதானம் செய்து குடும்பம் நடத்த வரும்படி கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அனில் மீது அவரது மாமியார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் அனிலை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதனால் மனமுடைந்த அனில் காவல் நிலையத்திலுள்ள கழிவறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது.
இது குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கோட்வாலி காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவல்காரர்களின் நடத்தை குறித்து விசாரிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.