தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹத்ராஸ் பாலியல் வன்புணர்வு விவகாரம்:  எஸ்.பி. இடைநீக்கம் - ஹத்ராஸ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடை நீக்கம்

லக்னோ: ஹத்ராஸ் இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கி கொலைசெய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட நான்கு காவலர்களை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இடைநீக்கம் செய்துள்ளார்.

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

By

Published : Oct 3, 2020, 1:16 AM IST

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மகளிர் ஆணையம், பெண் வழக்குரைஞர்கள் தொடர்ந்து குரல் எழுப்பிவருகின்றனர்.

இதற்கிடையில், இறந்த அப்பெண்ணின் உடலை, இரவோடு இரவாக காவல் துறையினர் பெண்ணின் குடும்பத்தினருக்குத் தெரிவிக்காமல் எரித்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க பிரதமர் நரேந்திர மோடி அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து வழக்கை விரைந்து நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அம்மாநில உள் துறை செயலர் பக்வான் ஸ்வரூப் தலைமையில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அமைத்துள்ளார்.

இந்நிலையில், உயிரிழந்த இளம்பெண்ணின் உடற்கூறாய்வு அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில், இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

தற்போது அனைத்து தரப்பிலிருந்தும் வரும் அழுத்தம் காரணமாக உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஹத்ராஸ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விக்ராந்த் வீர், ஆய்வாளர் தினேஷ்குமார் வர்மா, உதவி ஆய்வாளர் ஜாகவீர் சிங், தலைமைக் காவலர் மகேஷ் பால் ஆகிய நான்கு பேரை இடைநீக்கம் செய்துள்ளார்.

பெண்ணை எரித்த சம்பவம் தொடர்பான உண்மையைக் கண்டறிய இடைநீக்கம் செய்யப்பட்ட அலுவலர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து நர்கோ சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என உள் துறை கூடுதல் தலைமைச் செயலர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழு அளித்த முதற்கட்ட அறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details