மத்தியப் பிரதேச மாநிலம் பன்னாவில் பாஜக மூத்தத் தலைவர் உமா பாரதி, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகப் பேசினார். அப்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோரை பாகிஸ்தானின் முகமது அலி ஜின்னாவுடன் ஒப்பிட்டுப் பேசினார்.
இது குறித்து அவர் மேலும் பேசும்போது, “குடியுரிமை திருத்தச் சட்டத்தால் உமா பாரதிக்கோ அல்லது ஓவைசிக்கோ பிரச்னை வரப்போவது இல்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்தால் எவரும் பிரச்னைக்குள்ளாகப்போவதில்லை. யாருடைய உரிமையும் பறிக்கப்படப்போவதில்லை. ஆனாலும் பேய் மனநிலை கொண்ட சிலர் இது தொடர்பாக வதந்திகளைப் பரப்பிவருகின்றனர்.
அவர்கள் வதந்தி பரப்புவதன் நோக்கம் இந்தியாவை துண்டாட வேண்டும் என்பதே. நாடு உடைக்கப்பட்டதால் யாருக்கும் பலனில்லை. ஆனால் ஜின்னா தோன்றினார். இன்று ஜின்னா இல்லை. ராகுல், பிரியங்கா உள்ளனர். அவர்கள் இஸ்லாமியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி சமூக சுற்றுச்சூழலை கெடுக்கின்றனர்” என்றார்.