மகாராஷ்டிரா மாநிலம் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை, அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே விமான நிலையம் சென்று வரவேற்றார். முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் வரவேற்றனர்.
மகாராஷ்டிராவின் பாஷன் பகுதியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐ.ஐ.எஸ்.இ.ஆர்) வளாகத்தில் காவலர்கள், புலனாய்வு அமைப்புகள் மற்றும் காவல் உயர் அலுவலர்கள் கலந்து கொள்ளும் மூன்று நாட்கள் பாதுகாப்பு மாநாடு நடக்கிறது. இதில் பாதுகாப்பு குறித்து ஆலோசனைகள் நடத்தப்படும்.
இதை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி மகாராஷ்டிரா சென்றார். அப்போது அவரை உத்தவ் தாக்கரே வரவேற்றுள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா உடனான கூட்டணி முறிந்ததைத் தொடர்ந்து அங்கு பாஜகவால் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதையடுத்து தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் கைகோர்த்து சிவசேனா மகா கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது. அதன் பின்னர் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சந்தித்துள்ளார்.
காவலர்கள் கலந்து கொள்ளும் பாதுகாப்பு மாநாடு கடந்த காலங்களில் டெல்லியில் மட்டும் நடந்தது. நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர் இதன் முக்கியத்துவம் கருதி, வருடந்தோறும் ஒவ்வொரு மாநிலத்திலும் மாநாடு நடந்து வருகிறது என அலுவலர் ஒருவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: வளமான மகாராஷ்டிரா' - புதிய கூட்டணி அரசு வெளியிட்ட அதிரடி திட்டங்கள்!