குஜராத் உயர் நீதிமன்றத்தில், ஜனார்த்தனா சர்மா என்பவரும் அவரின் மனைவியும் நித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள தங்களின் குழந்தைகளை மீட்டு தருமாறு மனு தாக்கல் செய்திருந்தனர். இதுகுறித்து மனுவில், "7 - 15 வயதுடைய எனது நான்கு பெண் குழந்தைகளை 2013ஆம் ஆண்டு நித்தியானந்தா நிறுவிய கல்வி நிலையத்தில் சேர்த்தேன். தற்போது அவர்கள் அகமதாபாத்தில் உள்ள நித்தியானந்தாவின் மற்றொரு ஆசிரமத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களைச் சந்திக்க முயற்சித்தோம். குழந்தைகளை சந்திக்க கல்வி நிலையத்தின் அலுவலர்கள் மறுப்பு தெரிவித்தனர்" என குறிப்பிடப்பட்டது.
காவல்துறையின் உதவியோடு இரு பெண் குழந்தைகளை சந்தித்துவிட்டதாகவும், ஆனால், லோபமுத்ரா, நந்திதா ஆகியோர் தங்களைச் சந்திக்க வரவில்லை எனவும் பெற்றொர் தெரிவித்திருந்தனர். தங்களின் பெண் குழந்தைகளை கடத்தி தூக்கமின்றி இரு வாரங்களாக வைத்துள்ளதாகவும் பெற்றோர் குற்றஞ்சாட்டினர். இதுகுறித்த முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துவிட்டதாக பெற்றோர் கூறியுள்ளனர்.