கேரள தலைநகர் திருவனந்தபுரத்திலுள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு ஜூலை 5ஆம் தேதி வந்த ரகசிய பார்சலை சோதனையிட்ட சுங்கத் துறை அலுவலர்கள், அதிலிருந்த 30 கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இந்தக் கடத்தல் தொடர்பாக ஐக்கிய அமீரக தூதரகத்தில் பணிபுரிந்த முன்னாள் அலுவலர் சரித், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்டோரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அலுவலர்கள் கைது செய்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலர் சிவசங்கரிடம் என்ஐஏ அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இவ்வழக்குடன் பினராயி விஜயன் அலுவலகத்துக்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றஞ்சாட்டிவருகிறது. இதனால் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.