நாடு முழுவதும் விமான நிலையங்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பை கவனிக்கும் பொறுப்பை தனியாருடன் இணைத்து மேற்கொள்ள உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பொதுத்துறை – தனியார் கூட்டு (பி.பி.பி.) என்ற பெயரில் 50 ஆண்டு கால அடிப்படையிலான ஒப்பந்தம் ஒன்றை இதற்காக உருவாக்கியது. இந்த ஒப்பந்தத்தில் அதானி குழுமம் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக இதுநாள் வரை இந்திய வானூர்தி நிலைய ஆணையத்திடமிருந்து (ஏ.ஏ.ஐ ) விமான நிலையங்கள் தனியார் நிறுவமான அதானியின் ஏர்போர்ட் ஹோல்டிங் நிறுவனத்தின் வசம் கைமாறவுள்ளது. முதல்கட்டமாக கவுஹாத்தி, லக்னோ, மங்களூரு சர்வதேச விமான நிலையங்களின் நிர்வாகப் பொறுப்பை ஏற்கவிருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து இதற்கு கேரள உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக விமான நிலைய ஊழியர்களின் தொழிலாளர்கள் சங்கங்களின் வேண்டுகோளை ஏற்று கேரள அரசு அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தது. அந்த வழக்கு உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அவர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, கேரள அரசின் மனுவை மீண்டும் பரிசீலிக்குமாறு உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
இப்போது, அந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. இதற்கிடையில், நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் நிலையில் ஏலமிடும் செயல்முறையின் அடிப்படையில் விமான நிலையத்தை அதானி குழுவிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அறியமுடிகிறது. இதன் காரணமாக, மாநில அரசு திருவனந்தபுரம் விமான நிலைய தனியார்மயமாக்கலை வேகப்படுத்துவதாக சுட்டிக்காட்டி உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முன்நகர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம் விமான நிலையத்தின் விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டிற்காக மாநிர அரசு வெவ்வேறு கட்டடங்களில் நிலங்களை கையகப்படுத்தி மேம்படுத்தியுள்ளது. எனவே விமான நிலையத்தை இயக்குவதில் தங்களுக்கு குறிப்பிடத்தக்க உரிமைகள் இருப்பதாக அரசு கூறுகிறது. இன்னொரு பக்கம், ஏலம் விடும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியதை கவனித்த மாநில அரசு 'திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலைய லிமிடெட்' என்ற பெயரில் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி மாநில தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (கே.எஸ்.ஐ.டி.சி) இணைந்து ஏலத்தில் பங்கேற்க முடிவு செய்தது.