அப்படி கிளர்ந்தெழுந்த சிலர் மக்கள் போற்றும் மகத்தான தலைவர்களாகவும் உருவெடுத்தனர். அப்படி உருவெடுத்தவர்களில் சிலரைத்தான் மக்கள் இன்றும் நினைவில் கொள்கிறார்கள். அவர்களில் மார்க்ஸ், லெனின், ஃபிடல் காஸ்ட்ரோ, மண்டேலா, சே குவேரா போன்றோர் மக்களுக்காகவே சிந்தித்தனர், மக்களுக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக புரட்சியும் செய்தனர்.
உலகில் எந்த வகையான ஒடுக்குமுறையாக இருந்தாலும் சரி, அது வர்க்க ரீதியாகட்டும், பாலின ரீதியாகட்டும், மத, இன, நிற, சாதி என எந்த ரீதியான ஒடுக்குமுறையாகட்டும் அது கண்டிக்கப்படக்கூடியதே. அதில் இன, நிற ஒடுக்குமுறை ஓரளவு குறைந்திருந்தாலும் வர்க்க, பாலின, சாதிய ஒடுக்குமுறை மாற்று ரூபங்கங்களில் நீட்டித்துகொண்டுதான் இருக்கின்றன.
அதில் கொடூரமான சாதி ஒடுக்குமுறையை எதிர்த்து சமத்துவத்தை போதித்த இந்தியர்களில் சிலர் ஜோதிபா பூலே, சாவித்திரி பாய் பூலே, அண்ணல் அயோத்திதாச பண்டிதர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அண்ணல் ரெட்டைமலை சீனிவாசன், அய்யன் காலி ஆகியோர் ஆவர். அண்ணல் காந்தி கூட தீண்டாமையை வலுவாக எதிர்த்தாலும் மனுதர்மத்தை பலமாக ஆதரித்தார். குறிப்பிட்டு சாதிய ஒடுக்குமுறையை வலுவாக எதிர்த்தவர் என்றால் மாமேதை அம்பேத்கர் குறிப்பிடத்தக்கவர். இன்று அவரது நினைவு நாள்.
இன்று அம்பேத்கர் யாருக்கானவர் என்ற கேள்வியே பலராலும் கேட்கப்படும் ஒன்றாகும். ஆனால் அம்பேத்கரோ அனைவருக்குமானவர். ஆம் அனைவருக்குமானவர். அவரை வெறுமனே பட்டியலின மக்களுக்காகப் போராடியவர் என்ற வரையறைக்குள் அடைத்துவிட முடியாது. ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்காகவும் அம்பேத்கர் போராடியுள்ளார்.
பெண்களுக்கான சமத்துவம், உழைக்கும் மக்களுக்கான உரிமை, சாதிய ரீதியான ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்கள் என சமூகம் சார்ந்த அனைத்து தீமைகளுக்கு எதிராகவும் ஒரு தனி மனிதன் தன் வாழ்நாளையே ஒதுக்கியுள்ளார்.
நேரு, காந்தி போன்ற அன்றைய சுதந்திரப் போராட்ட தலைவர்களையே அம்பேத்கர் மாறுபட்ட சித்தாந்த கொள்கைகளால் எதிர்த்தார். ஏன் அம்பேத்கரின் அந்த மேதாவித்தனத்தையும், கல்வி அறிவையும் பார்த்து வியந்த காந்தி இவர் நிச்சயம் ஒரு பார்ப்பனராகத்தான் இருப்பார் என்று எண்ணும் அளவிற்கு அம்பேத்கரின் அறிவு இருந்தது. ஆனால் காந்திக்குத்தான் சிறிது ஏமாற்றம், ஏனென்றால் அம்பேத்கர்தான் பார்ப்பனர் இல்லையே! பிற்பாடு அம்பேத்கருக்கும் காந்திக்கும் பல கருத்து வேறுபாடுகள் இருந்தன. குறிப்பாக இரட்டை வாக்குரிமை, தனித்தொகுதி, இடஒதுக்கீடு, பௌத்த மதமாற்றம் என பல கருத்து வேறுபாடுகள் இருவருக்கும் இருந்தன. இதன் காரணமாக அம்பேத்கர் பல இன்னல்களுக்கு ஆளானார்.
தன் மக்களுக்காக ஏதும் செய்யாமல் இறக்கக்கூடாது என்று அம்பேத்கர் தெளிவாக இருந்தார். அதன் பொருட்டு தான் சாகும்வரையிலும் தன் மக்களின் நலன் கருதியே யோசனை செய்துகொண்டிருந்தார். கல்விதான் தனது ஆயுதம் என சிறு வயதிலேயே உணர்ந்த அம்பேத்கர் தனக்கு கல்வி கற்க கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்திக்கொண்டார். கல்விதான் ஒருவனின் சுயத்தை முன்னேற்றும் என்றும் வலியுறுத்தினார்.
தன் சமூக மக்களுக்காக மட்டுமல்லாமல், மற்ற பின்தங்கிய சமூக மக்களின் நலனுக்காகவும் அம்பேத்கர் போராடினார், பெண்களின் சொத்துரிமைக்காகவும் போராடினார். அதன் காரணமாக தன் பதவியையே துட்சமென கருதி ராஜினாமா செய்தார். இப்படி மக்களின் நலன் கருதியே என்னாளும் உழைத்த புரட்சியாளனை அன்று எதிர்த்தவர்கள், இன்றோ அவரை ஆதரித்து மதச்சாயம் பூசும் அவலமும் நீள்கிறது. ஏனென்றால் அவர் அனைவரின் தலைவராகவும் வாழ்ந்திருக்கிறார்.
இன்று பல தலைவர்களின் சிலைகளும் சுதந்திரக் காற்று சுவாசித்துக் கொண்டிருக்க, அண்ணலோ குண்டுக்குள்ளேயே அடைப்பட்டுக் கிடக்கிறார். அப்படி அடைப்பட்டுக் கிடந்தவர் வெளியே வந்தாலோ அவரின் சிலை உடைக்கப்படுவதோ, அவமானப்படுத்தப்படுவதோ நடந்துகொண்டுதான் இருக்கும். சித்தாந்தங்கள் உடைக்கப்படுவதில்லை.சிலைகள் உடைக்கப்பட்டாலும் அதனை உடைக்க உடைக்க பல விதைகள் மண்ணில் விழுந்துகொண்டுதான் இருக்கும். ஏனெனில் ஆடுகள் வெட்டப்படலாம், சிங்கங்கள் வெட்டப்படுவதில்லை.
இதையும் படிங்க: அன்றும் இன்றும் என்றென்றும் அம்பேத்கர்.!