இந்திய ரயில்வே தனது வரலாற்றில் முதல் முறையாக தனியார் நிறுவனங்களுக்கு அதன் கதவுகளைத் திறந்துள்ளது. 109 வழித்தடங்களில் 151 நவீன ரயில்களை இயக்க தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. இந்த திட்டம் சில காலமாக எதிர்பார்த்த ஒன்று என்றாலும், ஏலத்தின் அழைப்பின் மூலம் அந்த திட்டத்தை செயல்படுத்த ஆரம்பகட்ட நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டுள்ளது. ரயில்வே, தனியார் நிறுவனங்கள் மற்றும் மக்களுக்கு இது எந்தளவு பயனளிக்கும் என்பதுதான் தற்போது எழுந்துள்ள கேள்வி.
ரயில்வேயை நவீனமயமாக்குவது மற்றும் விரிவாக்கம் செய்வது என்பது ஒரு புதியவிஷயம் அல்ல. இதுவரை பல குழுக்கள் இது தொடர்பாக செயல்பட்டுள்ளன. ஆனால், விவேக்தேவ் ராய் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளின்படி 2015ஆம் ஆண்டில் சமீபத்திய ஏலம் கோரப்பட்டது. இதை தனியார்மயமாக்கல் என்று அழைக்கக்கூடாது, தாராளமயமாக்கல் என்று கூறவேண்டும் என்று அக்குழு கூறுகிறது. அதுவும் உண்மைதான், ஏனெனில் மொத்த சேவைகளில் 5 விழுக்காட்டை மட்டுமே தனியார் துறைக்கு ஒப்படைக்க இந்திய ரயில்வே தயாராகி வருகிறது.
- தனியார் ரயிலின் முதல் செயல்பாடு தொடங்குவது - ஏப்ரல் 2023
- மதிப்பிடப்பட்ட திட்டமுதலீடு - ரூ. 30,000 கோடி
- ஆர்வமுள்ள நிறுவனங்கள் - 20
ஏன் இந்த முடிவு?
பயணிகள் பார்வையில் பெரிய நகரங்களுக்கு இடையில் இன்னும் அதிகமான ரயில்கள் தேவை. இயக்க திறன் இல்லாததால் 5 கோடி பயணிகளை ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்க முடியவில்லை என்பதை ரயில்வே வாரியம் ஏற்றுக்கொள்கிறது. கோடை மற்றும் பண்டிகை காலங்களில் இதன் தேவை இன்னும் அதிகமாக உள்ளது. அதன் உள்கட்டமைப்பை விரிவுபடுத்தாவிட்டால், அடுத்த சில ஆண்டுகளில் சாலை போக்குவரத்து துறைக்கு தனது வர்த்தக பங்கை இழக்க நேரிடும் என்று ரயில்வே அச்சம் கொண்டுள்ளது. கூடுதலாக, தேவ் ராய் கமிட்டி அரசாங்கத்தின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை அங்கீகரித்தது. பயணத்தின் தரம் மேம்படும் என்பதற்கு உத்தரவாதம் இருந்தால் பயணிகள் அதிக விலை கொடுக்க தயாராக உள்ளனர் என்றும் குழு முடிவு செய்தது. அதனால் தான் ரயில்வேயின் நடவடிக்கைகளுக்கு தனியார் முதலீடு கோரப்படுகிறது.
பயணிகளுக்கு இது நன்மை பயக்குமா?
எந்தத் துறையிலும் ஏகபோகம் இருப்பது நல்லதல்ல. போட்டி இருப்பது தான் நல்லது. இருப்பினும், இந்திய ரயில்வே இதுவரை பயண கட்டணங்களை நிர்ணயிக்கும் போது வருமானத்திற்கு முன்னுரிமை கொடுப்பதை விட, பயணிகளின் வசதிக்காக விலையை நிர்ணயித்துள்ளது. இந்த பற்றாக்குறையை சரக்கு போக்குவரத்துக் கட்டணங்களை சற்று அதிகரிப்பதன் மூலம் ஈடுசெய்தது. தனியார் நிறுவனங்களின் முடிவுகளால் பயணிகளுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பதை இப்போது நாம் பார்க்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் இந்திய ரயில்வேயைப் போலல்லாமல் லாபத்தில் மட்டுமே கவனம் செலுத்தும். ஆனால் சேவையின் தரம் பெரும்பாலும் மேம்படும் என்பது நிச்சயம். பயணிகள் கட்டணத்தில் சிறிதளவு அதிகரிப்பைப் பொருட்படுத்த மாட்டார்கள். தற்போது ஒரு முன்னோட்ட திட்டம் போல தோற்றமளிக்கும் இந்த முடிவு, வெற்றிகரமாக அமைந்தால், அதிக தனியார் பங்கேற்பை அழைப்பதன் மூலம் மேலும் அதிக வழித்தடங்களுக்கு இத்திட்டம் நீட்டிக்கப்படலாம்.
களத்தில் உள்ள நிறுவனங்கள்
முதல் ஏல நடைமுறையின்படி, சுமார் ரூ. 30,000 கோடி எதிர்பார்க்கப்படுகிறது. தலா 16 பெட்டிகளுடன் 151 ரயில்களை இயக்க 20 நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. அவற்றில் அதானி போர்ட், டாடா ரியால்டி மற்றும் இன்ஃப்ரா, எஸ்ஸல் குழுமம், பாம்பார்டியர் இந்தியா, சீமென்ஸ் ஏஜி மற்றும் மெக்குவாரி குழு ஆகியவை உள்ளன. விஸ்டாரா, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் போன்ற விமான நிறுவனங்களும் இதில் பங்கேற்க ஆர்வம் காட்டுகின்றன.
அதானி போர்ட்: இந்த நிறுவனத்திற்கு போதிய முன் அனுபவம் உள்ளது. இது ஏற்கனவே துறைமுகங்களுடன் இணைக்கும் 300 கி.மீ தனியார் ரயில் பாதைகளை கொண்டுள்ளது. பெரிய அளவிலான உள்கட்டமைப்பு திட்டங்களை மேற்கொள்வதில் அனுபவம் உள்ளது. தற்போது செயல்பாட்டில் உள்ள மெட்ரோ ரயில் திட்டங்களிலும் இது ஒரு பங்கைக் கொண்டுள்ளது.