தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோழிக்கோடு விமான விபத்தால் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன் - மோடி இரங்கல்

கோழிக்கோடு விமான விபத்து நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ராகுல் காந்தி என பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கோழிக்கோடு
கோழிக்கோடு

By

Published : Aug 8, 2020, 1:35 PM IST

கரோனா காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்துவர 'வந்தே பாரத் மிஷன்' திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, துபாயிலிருந்து கேரள மாநிலம், கரிப்பூர் விமான நிலையத்திற்கு வந்த ’ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமானம் நேற்று (ஆகஸ்ட் 7) இரவு விபத்துக்குள்ளானது. கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், தரையிறங்கும்போது ஓடுபாதையில் வழுக்கியதால் இந்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், "கோழிக்கோட்டில் நடைபெற்ற விமான விபத்தால் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். பலரின் அன்புக்குரியவர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளார்கள். அவர்களுக்கு தோளோடு தோள் கொடுப்பேன். படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். நிலைமை குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் கேட்டறிந்தேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகள் செய்து வருகின்றன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "கோழிக்கோட்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளான வருந்தத்தக்க செய்தியைக் கேட்டு துன்பத்தில் மூழ்கியுள்ளேன். நிலைமை குறித்து கேரள ஆளுநர் ஆரிப் முகமதிடம் கேட்டறிந்தேன். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்து குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "கோழிக்கோடு விமான விபத்து செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

பிரியங்கா காந்தி வெளியிட்ட இரங்கல் செய்தியில், "கோழிக்கோடு விமான விபத்தில் பயணிகளுக்காகவும் அவர்களின் குடும்பத்தாருக்காகவும் துணை நிற்பேன். இம்மாதிரியான துக்ககரமான, துன்பியல் சூழலில் அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஷேர் சாட் செயலியில், 750 கோடி முதலீடு செய்ய மைக்ரோசாப்ட் திட்டம்!

ABOUT THE AUTHOR

...view details