கரோனா பரவலுக்கிடையே மே மாதம் ஏற்பட்ட ஆம்பன் புயலால் மேற்கு வங்க மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. திரிணாமுல் காங்கிரஸ் அரசு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நிவாரண உதவிகளை வழங்கிவருகிறது.
நிவாரணம் வழங்குவதில் அக்கட்சிப் பிரமுகர்கள், தலைவர்கள் ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டி, கிழக்கு மித்னாபூர், வடக்கு 24 பர்கானாஸ் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஊழலில் சம்பந்தப்பட்டவர்களை கட்சியிலிருந்து நீக்கி, கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்துவருகிறது.
மேலும், பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர்களும் ஊழலில் ஈடுபட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் கண்டறியப்பட்டால் உடனடி நடவடிக்கை பாயும் என இரு கட்சித் தலைமைகளும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இச்சூழலில், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திலுள்ள ஷ்யாம்நகர் பகுதியில் பாஜக எம்பி அர்ஜுன் சிங் தலைமையில் ஊழலுக்கு எதிரான பேரணி நடைபெற்றது. இதில், பல்வேறு பாஜகவினர் கலந்துகொண்டு, திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர்.
பேரணி சென்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் பாஜக தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இம்மோதலில், இருதரப்பினரும் பலமாகத் தாக்கிக்கொண்டது மட்டுமல்லாமல், கற்கள், பெட்ரோல் குண்டுகளையும் வீசியுள்ளனர். இதில் இரு தரப்பினருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாஜக-திரிணாமுல் காங். மோதல் திரிணாமுல் கட்சியினர் பாஜகவைச் சேர்ந்தவர்களைக் கடுமையாகத் தாக்கி, பலருடைய செல்போன்களைப் பறித்துச் சென்றதாக அர்ஜுன் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாகப் பேசிய திரிணாமுல் அமைச்சர் ஜோதிபிரியோ முல்லிக், பாஜக ஆதாரமற்ற குற்றச்சாட்டைத் தெரிவித்துவருவதாகவும், முதலில் பாஜகவினர்தான் தங்களது கட்சித் தொண்டர்களைத் தாக்கியதாகவும் கூறியுள்ளார். மேலும், அவர்கள் தாக்கியதால்தான், திரிணாமுல் கட்சித் தொண்டர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதாகவும், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இருதரப்பிலிருந்தும் புகார்கள் வந்துள்ளதாகக் கூறும் காவல் துறையினர், இம்மோதல் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:ராஜஸ்தான் களேபரம்; அம்பலமான பாஜகவின் ஜனநாயக விரோத செயல் - காங்கிரஸ் குற்றச்சாட்டு!