கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக கோவிட் பரவல் குறித்த தற்போதைய தகவல்களைத் தெரிந்துகொள்ள பொதுமக்கள் பெருமளவில் ஆர்வம் காட்டுகின்றன.
இந்தப் பெருந்தொற்று சமயத்தில் அச்சத்திலுள்ள மக்களைக் குறிவைக்கும் சைபர் குற்றவாளிகள், அவர்களிடமிருந்து பணத்தை ஏமாற்றி பெற முயற்சி எடுத்துவருகின்றனர். மூன்று வாரங்களுக்கு முன், உள் துறை அமைச்சகம் கரோனா காலத்தில் உருவாகியுள்ள போலி தளங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டது. பெரும்பாலும் கரோனா என்ற வார்த்தையுடன் -map, -realtime, -status போன்ற வார்த்தைகளைச் சேர்த்து புதிய போலி தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கரோனாவைப் பயன்படுத்தி சுமார் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட போலி தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்தியத் தேசிய சைபர் பாதுகாப்பு அலுவலர் லெப்டினன்ட் ஜெனரல் ராஜேஷ் பந்த் கூறியுள்ளார்.
கரோனா குறித்து புதியத் தகவல்களை அனுப்பும் சைபர் குற்றவாளிகள் லட்சக்கணக்கான மக்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்க உள்ளதாகவும் மின்னஞ்சல் அனுப்புகின்றனர். இந்த மின்னஞ்சலைக் கண்டு பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று அமெரிக்கா, இங்கிலாந்து அரசுகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
கோவிட்-19 பாதிப்பிற்குப் பின் இணையக் குற்றங்கள் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எஃப்.பி.ஐ. தெரிவித்துள்ளது. ஊரடங்கால் வீட்டில் சிக்கியுள்ள மக்களின் அச்சத்தைப் பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள், அவர்களிடமிருந்து பணத்தைப் பெற முயல்வதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் சமீபத்தில் கூறினார். இது தற்போதைய நிலைமையின் தீவிரத் தன்மையை உணர்த்தும்.
இந்த சைபர் குற்றங்களைத் தடுக்க சுமார் 35 நாடுகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வல்லுநர்கள் முயற்சி எடுத்துவருகின்றனர். அதே நேரத்தில் வீட்டிலிருக்கும் மக்களிடம் இதுபோன்ற சைபர் குற்றங்களுக்கு ஏமாறக் கூடாது என்ற விழிப்புணர்வையும் நாம் பரப்ப வேண்டும்.
மூன்று ஆண்டுகளுக்கு முன் 'Wanna Cry' என்ற பெயரில் சைபர் குற்றவாளிகள் நடத்திய இணையத் தாக்குதலால் 175-க்கும் மேற்பட்ட நாடுகள் பெரும் பாதிப்பைச் சந்தித்தன.
அதே நேரத்தில் ரஷ்யா, உக்ரைன், அமெரிக்க, ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான டெபிட் கார்டு தகவல்களை சைபர் குற்றவாளிகள் வெளியிட்டனர்.