தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியில் வசிப்பவர் ராமு. மென்பொறியியலாளரான இவர் தனது நகரத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு எதிராக விடாமுயற்சியுடன் போராடிவருகிறார். அதன் ஒரு பகுதியாக அவர் 'பிளான்ட் ஃபார் பிளாஸ்டிக்' என்ற புதிய திட்டம் ஒன்றை தொடங்கினார். இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு சிறிய அளவிலான பிளாஸ்டிக் பொருளை அவரிடம் கொடுப்பவர்களுக்கு, அதற்கு பதிலாக அவர் ஒரு மரக் கன்றை வழங்குகிறார்.
இத்திட்டத்திற்காக கிழக்கு கோதாவரியிலிருந்து ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் கொண்டு வரப்படுகின்றன. இவ்வாறு அவர் சேகரிக்கும் பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்வதற்காக இலவசமாகவே ஹைதராபாத் மாநகராட்சிக்கு வழங்குகிறார். அதுமட்டுமல்லாமல், பிளாஸ்டிக் இல்லாத நகரத்தை உருவாக்க போராடும் இவர், தனது இலக்கை நிறைவேற்ற டிபன் பாக்ஸ் சவால் என்ற மற்றொரு சவாலையும் கையில் எடுத்துள்ளார்.
அதன்படி மார்க்கெட்டில் இருந்து இறைச்சியை எடுத்துச் செல்ல ஒருமுறை மட்டும் பயன்படும் பிளாஸ்டிக்கிற்கு பதிலாக டிபன் பாக்ஸை பயன்படுத்துமாறு மக்களிடம் அறிவுறித்திவருகிறார். "இறைச்சி சாப்பிடுவதை நிறுத்துமாறு மக்களிடம் தான் கேட்பதில்லை" என்று கூறும் ராமு, "குறைந்த பட்சம் சுற்றுச்சூழலை பாதுகாக்கவாது முன்வாருங்கள்" என்று பொதுமக்களிடம் வலியுறுத்துகிறார்.