மேலும் இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
"பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யும் போது எஸ்சி /எஸ்டி மக்களின் மக்கள் தொகைக்கு இணையாக நிதி ஒதுக்க வேண்டும் என்பது மத்திய அரசு வகுத்துள்ள விதியாகும். இதற்கெனப் பட்டியலினத்தவர் துணைத் திட்டம் ( SCSP) பழங்குடியினத்தவர் துணை திட்டம் (TSP) என இரண்டு திட்டங்கள் மத்திய அரசால் நடைமுறைப் படுத்தப்படுகின்றன.
தற்போது உள்ள மக்கள் தொகையின்படி எஸ்சி மக்களுக்கு 16.6 % உம் எஸ்டி மக்களுக்கு 8.6% உம் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் தற்போது பாஜக அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டில் சுமார் மூன்றரை சதவிகிதம் அளவுக்குத்தான் எஸ்சி மக்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது.
பட்டியலின மாணவர்களின் உயர்கல்விக்காகப் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே புரட்சியாளர் அம்பேத்கர் போராடிப் பெற்ற உரிமைதான் போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை என்ற கல்வி உதவித் தொகை ஆகும். அதன் மூலம்தான் கணிசமான எஸ்சி மாணவர்கள் உயர் கல்வியைப் பெற முடிந்தது.
ஆனால் கடந்த பாஜக ஆட்சியில் இந்த படிப்பு உதவித் தொகைக்கான நிதி ரூ.6 ஆயிரம் கோடியாக இருந்தது. ஆனால், இப்போது ரூ.2,926.82 கோடியாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த பட்ஜெட்டில் எஸ்சி மக்களுக்கான திட்டங்கள் அனைத்துக்கும் சேர்த்து ஒதுக்கப்பட்டுள்ள தொகை கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகையை விட ரூ. 2,165 கோடி குறைவாகும்.
பாஜக அரசு ஒரு தலித் விரோத அரசு என்பதற்கு இந்த நிதிநிலை அறிக்கையே சான்றாக இருக்கிறது. சுதந்திர இந்தியாவில் தலித் மக்களின் நலனுக்காக மிக மிகக் குறைவான தொகையை ஒதுக்கிய பட்ஜெட் இதுவாகத்தான் இருக்கும். இந்த அநீதியைக் களைய பாஜக அரசு முன்வரவேண்டும். கூடுதல் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்", என்று கூறப்பட்டுள்ளது.