'மூன்றாம் பாலினம்' என்று அங்கீகரிக்கப்பட்ட திருநங்கை/ திருநர்களுக்கு குடும்பச் சொத்தில் சம பங்கு பெறும் உரிமை இருக்கிறதென்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று வருவாய் சட்டத்தில் (2006) உத்தரப் பிரதேச அரசு திருத்தம் செய்துள்ளது.
உ.பி.,யில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சொத்துரிமை வழங்க சட்டத்திருத்தம்! - முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்
லக்னோ: மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் மூதாதையர் சொத்தில் சம பங்கு கோரும் உரிமை வழங்கும் வகையில் வருவாய் சட்டத்தில் உத்தரப் பிரதேச அரசு திருத்தம் செய்துள்ளது.
அந்த திருத்தத்தின்படி, மாநிலத்தின் விவசாய நிலங்கள் உள்ளிட்ட அனைத்து குடும்ப சொத்துக்களிலும் வாரிசாக பங்கு பெற மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிமை அளிக்கப்படும். அவர்கள் குடும்பத்தின் உறுப்பினர்களாக அங்கீகரிக்கப்படுவார்கள் என அறியமுடிகிறது. இந்தச் சட்டத்திற்கான வரைவு திட்டத்தை மாநில சட்ட ஆணையம், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சமர்பித்தது.
முன்னதாக, அனைத்து பரம்பரைச் சொத்துகளில் பங்கு பெறும் சட்டங்களில் 'மகன்கள்', 'மகள்கள்', 'திருமணமானவர்கள்', 'திருமணமாகாதவர்கள்', 'கைம்பெண்' ஆகிய பிரிவினர்களுக்கு மட்டுமே உரிமை வழங்கப்பட்டு வந்தன. அதில் குறிப்பிட்ட மூன்றாம் பாலின குழந்தைகளுக்கும் சொத்துரிமை பெறும் உரிமை மறுக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.