74ஆவது சுதந்திர தின விழாவையொட்டி புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தேசியக்கொடி ஏற்றினார்.
முன்னதாக காவலர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் கரானா முன்களப் பணியாளர்களை கவுரவித்து பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கினார்.
அதையடுத்து விழாவில் பேசிய அவர், "புதுச்சேரியில் 2019-20ஆம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 37 ஆயிரத்து 943 கோடி இது முந்தைய ஆண்டைவிட 10.95 விழுக்காடு கூடுதலாகும்.
அது நடப்பு நிதியாண்டில் 39 ஆயிரத்து 541.55 கோடியாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தனிநபர் வருமானம் 2019-20 ஆண்டில் ரூ.2 லட்சத்து 32 ஆயிரத்து 57ஆக உயர்ந்துள்ளது.
இது 5.3 விழுக்காடு வளர்ச்சியை காட்டுகிறது. அதுவும் நடப்பு நிதியாண்டில் ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்து 698ஆக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து பேசிய அவர், " கரோனாவால் எதிர்காலத்தில் நிதி தட்டுப்பாட்டினை எதிர்கொள்ள நேரிடும். மத்திய அரசின் சலுகைகள் வெகுவாக குறைக்கப்பட்டுவிட்டன. எனவே மத்திய உதவியை பெறுவது சவாலாக இருக்கிறது" எனக் கூறினார்.
மேலும் அவர், "புதுச்சேரி- கடலூர் இடையில் ரயில் போக்குவரத்து திட்டம் மறு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
வழித்தட அளவீடு, மண் தர ஆய்வு செயல் திட்டத்திற்கு தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. ரூ. 17 கோடியில் மத்திய அரசின் உதவியுடன் ஓட்டுனர் பயிற்சி நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சேதராப்பட்டில் ரூ. 60 கோடி முதலீட்டில் புதிய தொழிற்பேட்டை அமைக்க தொழில் முனைவோர்களுக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:அலுவலர்களை அழைத்து ஆலோசிப்பதை அமைச்சர்கள் நிறுத்துங்கள்: கிரண்பேடி அறிவுரை