புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தினைத் தொடர்ந்து புதுச்சேரி விடுதலை சிறுத்தை கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவர் கூறியதாவது, “மத்திய மாநில அரசுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனுக்கும் கரோனா தடுப்பு நடவடிக்கையில் பொறுப்பு இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் கரோனா நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை. அரசின் நடவடிக்கை கரோனாவைக் கட்டுப்படுத்தவில்லை.
விசிக தலைவர் தொல். திருமாவளவன்.
மாறாக பெருந்தொற்றை அதிகரிக்கச் செய்துள்ளது. கரோனாவிற்கு துரித பரிசோதனை அதிக எண்ணிக்கையில் இல்லை. மிக சொற்பமாக இருக்கிறது. பத்து லட்சம் பேரில் 30 ஆயிரம் பேருக்காவது, பரிசோதனை எடுக்கப்பட வேண்டும். தளர்வுக்குப் பிறகு சமூக பரவல் அதிகமாகிவருகிறது.
இதை தான் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதனை மோடியும் மறுக்கவில்லை. இறப்பவர்களின் கணக்கு மறைக்கப்படுகிறது. கரோனா நோயாளிகளிடம் நாளொன்றுக்கு 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இத்தனை பெரிய தொகையை ஏழைகளால் கட்டமுடியாது.
குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு தனியார் மருத்துவமனைகளை அரசு கையில் எடுக்க வேண்டும். தளர்வு நேரத்தில் அதிகரித்து வரும் தொற்றுப் பரவல் குறித்து அரசு முழு கவனம் செலுத்தவில்லை. பத்தாம் வகுப்பு தேர்வை மாநில அரசு ரத்து செய்துவிட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும்.
புதுச்சேரியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் கரோனா நிவாரண நிதியாக வழங்க வேண்டும். புதுச்சேரியில் மின் துறையை தனியார் மயமாக்கப்படும் என்பதை விடுதலை சிறுத்தை கட்சி வன்மையாக கண்டிக்கிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு மின் கட்டணம் வசூல் செய்யக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: குறிப்பிட்ட சமூகத்தை அவதூறாக வாட்ஸ்ஆப்பில் பதிவு : ராஜஸ்தான் டாக்டர் உட்பட 3 பேர் மீது வழக்கு!