தெலங்கானாவில் அம்மாநில போக்குவரத்து ஊழியர்கள் சுமார் 48 ஆயிரத்திற்கும் மேலானோர் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி; மகாத்மா காந்தி, மலக்பேட், முஷிராபாத் பேருந்து பணிமனை ஆகியப் பகுதிகளில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதியிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தெலங்கானா மாநிலத்தில் பேருந்துகளை தற்காலிகமான ஓட்டுநர்களை வைத்து அரசு இயக்கி வருகிறது. இருப்பினும் போதிய பேருந்துகளின் சேவை இல்லாததால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் என அனைத்துத் தரப்பினரும் மெட்ரோ ரயில் மூலம் பயணத்தை மேற்கொள்கின்றனர். இதனால் மெட்ரோ ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
போராட்டத்தில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்தனர். குறிப்பாக, கடந்த ஞாயிறுயன்று இரண்டு ஓட்டுநர்கள் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தனர். மற்ற இருவரில் ஒருவர் தன் மீது தீ வைத்துக் கொண்டும், ஒருவர் தூக்கிட்டும் தற்கொலை செய்து கொண்டனர்.
2017ஆம் ஆண்டில் இருந்து ஊதிய உயர்வு அளிக்கப்படாததால், அதனை தரக்கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபடும் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில், முன் வைக்கும் கோரிக்கையை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஏற்க மறுத்துள்ளார்.