தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இந்த கனமழை காரணமாக நகர் முழுவதும் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது.
நேற்று, மாலை தொடங்கிய கனமழை நள்ளிரவு வரை நீடித்தது. இதனால் நகரிலுள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது.
ஹைதராபாத் தவிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அடுத்த 72 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. இதனால் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை ஆணையர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு தெலுங்கானா தலைமைச் செயலர் சோமேஷ்குமார் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், "மாநிலத்தில் தற்போது நிலவும் நிலைமை குறித்து முதலைமைச்சர் விசாரித்தார். அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் உசார் நிலையில் இருக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார். பலத்த மழை மாநிலத்தை தாக்கியுள்ளது. ஹைதராபாத்தில், பல பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 20 செ.மீ மழை பெய்துள்ளது. இதனால் பல விரும்பத்தகாத சம்பவங்களும் நடந்துள்ளன.
நானும் டிஜிபியும் இது குறித்து தொடர்ந்து காணொலிகாட்சி மூலம் விவாதித்துவருகிறோம். அனைத்து மாவட்ட மற்றும் மண்டல் அலுவலர்களுடன் தொடர்பில் இருங்கள். அடுத்துவரும் நாள்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் நேற்று (அக்.13) பெய்த கனமழை காரணமாக சுவர் இடிந்து ஏற்பட்ட இருவேறு விபத்துகளால் 15 வயது சிறுமி உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விடுதலையான மெகபூபா முப்தி: வரவேற்ற ஃபரூக் அப்துல்லா