டெல்லி முகர்ஜி நகரில் சிறுவர் சீர்திருத்த பள்ளி ஒன்று உள்ளது. இங்கு பல்வேறு குற்றங்கள் செய்த சிறுவர்கள் கைது செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கிருந்த 15 வயது சிறுவனை 17 வயது சிறுவன் ஒருவன் மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ளான். இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுவனின் உடல்நிலை மோசமானது. அவரை சிகிச்சைக்காக சீர்திருத்த பள்ளி வளாகத்தில் இருக்கும் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட போது தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்துள்ளார்.
இது குறித்து உடனே சீர்திருத்த பள்ளி அலுவலருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் அவர் காவல்துறையினருக்கு புகார் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட சிறுவனிடம் காவல்துறையினர் விசாரிக்கையில், தான் கழிவறைக்கு சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒருவன், கூர்மையான ஆயுதங்களால் அச்சுறுத்தி பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக அச்சிறுவன் கூறியுள்ளார்.